உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளைபொருட்கள் உற்பத்தி விதைகள் பங்கு முக்கியம்

விளைபொருட்கள் உற்பத்தி விதைகள் பங்கு முக்கியம்

பல்லடம்;-விளை பொருட்களின் உற்பத்தியை பெருக்க விதைகளின் பங்கு மிக முக்கியம் என, பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.வேளாண் அலுவலர் வளர்மதி அறிக்கை:விதைகள் தரத்துடன் இருந்தால் மட்டுமே, உற்பத்தி, 15 சதவீதம் அதிகரித்து நல்ல விளைச்சலுக்கு வழிவகுக்கும். வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில், விதைகளின் பங்கு மிக முக்கியமானவை. நல்ல தரமான விதைகள் என்பது இனத்துாய்மை, புறத்தூய்மை, முளைப்புத் திறன் மற்றும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.ஒவ்வொரு பயிர்களுக்கு இடையிலும் ஈரப்பதத்தின் சதவீதம் மாறுபடும். நெல்லில், 13 சதவீதம், கம்பு, கேழ்வரகு, 12 மற்றும் உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை, எள் ஆகியவற்றில், 9 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். விதைகள் சேகரிப்பின் போது நாக்குப் பொய்கள் புதிதாக இருக்க வேண்டும். மாலத்தியான் 0.1 சதவீத கரைசலை மூட்டைகள் நனையாமல் தானியங்கள் மேல் படாமல் தெளிப்பதால் பூச்சிகள் கட்டுப்படும்.இதுதவிர, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை விதை மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஈரப்பத பரிசோதனை செய்த பின் அதன் முடிவுகளின் அடிப்படையில் சில பூச்சி கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் பெற பல்லடம் விதை பரிசோதனை நிலையத்தை அணுகவும்.-----2 வயது குழந்தை பலிபொங்கலுார், ஆக. 25--பொங்கலுார் ஒன்றியம், ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,37; கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி. தம்பதியருக்கு நித்ரன், சாரதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு, 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் 2 வயது குழந்தை நித்திரன் தவறி விழந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.அவிநாசி பாளை யம் போலீசார் விசாரிக்கின்றனர்.---மருத்துவ முகாம்அனுப்பர்பாளையம், ஆக 25- -திருப்பூர் மாநகராட்சி சார்பில், வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், மாநகராட்சி, 10வது வார்டு ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ் குமார், தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் பவன்குமார், வார்டு கவுன்சிலர் பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர். பொது மருத்துவம், இருதய நோய், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் தனி தனி மருத்துவர்கள் என, 25 பேர் சிகிச்சை அளித்தனர். தேவைப்பட்டவர்களுக்கு இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.முகாமில், 1,196 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர். அவர்களில், 37 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.--கிருஷ்ண ஜெயந்தி விழாதிருப்பூர், ஆக. 25-திருப்பூர், ராயபுரம் ஸ்ரீபூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், 74ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கியுள்ளது.ஸ்ரீகிருஷ்ணசாமி கோவிலில், தினமும் காலை, 7:00 மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகளும், மாலையில் இசை நிகழ்ச்சி மற்றும் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இரண்டாவது நாளான நேற்று, சவ்லப்ய ஸ்ரீகிருஷ்ணர் அலங்கார பூஜையும் நடந்தது. இன்று, கிரிதர கோபாலன் அலங்காரம் - பக்தி இன்னிசை, கோலாட்டம், கும்மியாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் அலங்காரம் - சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியர் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. ஜெயந்தி விழாவையொட்டி, 27 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், நம்பெருமாள் திருவீதியுலா மற்றும் உறியடி உற்சவமும் நடைபெற உள்ளது. வரும் 28ம் தேதி காலை, மஞ்சள் நீர் உற்சவமும், மதியம் அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ண சுவாமி பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.---மொத் வியாபாரிகளை குறிவைத்து மோசடிதிருப்பூர், ஆக. 25-பல்லடத்தில், மொத்த வியாபாரியிடம், பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முந்திரியை பெற்று மோசடியில் ஈடுபட்ட கோவை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பல்லடத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம், கோவையை சேர்ந்த ஜெமீஷா, 34 என்பவர், பத்து லட்சம் ரூபாய்க்கு, ஒன்றரை டன் முந்திரி பருப்பை கொள்முதல் செய்தது. வியாபாரிக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினார்.இதுதொடர்பாக வியாபாரி விசாரித்த போது, ஜெமீஷா, நாமக்கல், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இதே போன்று சிறிய தொகையை முன்பணமாக கொடுத்து விட்டு, பொருள்களை வாங்கிய பின், மீதி பணத்தை தராமல் மோசடியில் ஈடுபடுவது தெரிந்தது. மோசடி தொடர்பான புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.கடந்த வாரம் தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஜெமீஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி குறித்து விசாரிக்க அவரை ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். மொத்த வியாபாரிகளை குறி வைத்து, வாங்கும் பொருட்களின் விலையை அதிகமாக விலை பேசி வாங்கிய பின், அந்த பொருட்களை வெளியில் விற்று கொண்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.திருவண்ணாமலையில், 12 லட்சம் ரூபாய், நாமக்கல்லில், நான்கு லட்சம் ரூபாய் ஏமாற்றினார். அங்கு கொடுக்கப்பட்ட புகார்களில் போலீசார் அழைத்து விசாரித்தது தெரிந்தது.''மோசடியில் தொடர்புடைய கும்பல் தமிழகம் முழுவதும் 'நெட்வொர்க்' கொண்டிருக்கிறது; ஏமாற்றப்படும் வியாபாரிகள் மிரட்டப்படுவதால், பலர் புகார் கொடுப்பதில்லை'' என்கிறார்கள் மொத்த வியாபாரிகள் சிலர்.மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.----முருகன் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பள்ளி வாகனம் பழுது: அதிகாரி உதவிக்கரம்திருப்பூர், ஆக. 25-அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பள்ளி வாகனம் பழுதடைந்தது. இதையறிந்த தாராபுரம் டிப்போ அதிகாரி, மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.

'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு -2024'

பழநியில் நேற்று துவங்கியது. திருப்பூர் அருகேயுள்ள சோமனுாரில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், வாழை தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என, 60 பேர் தனியார் பள்ளி பஸ்சில், மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் பழுதானது. பள்ளி தரப்பில், தாராபுரம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் கணேசனிடம் தெரிவித்தனர். உடனே, மாற்று பஸ் ஏற்பாடு செய்து, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக சோமனுாருக்கு அனுப்பி வைத்தார்.--------மருத்துவராகும் கனவு நனவாகிறதுதிருப்பூர்:''கனவு காணுங்கள்... ஆனால் கனவு என்பது நீ துாக்கத்தில் காண்பது அல்ல; உன்னை துாங்க விடாமல் செய்வதே கனவு'' என்கிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்.ஆம். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 27 மாணவ, மாணவியர் கவுன்சிலிங் மூலம் மருத்துவப் படிப்புக்கான கல்லுாரியை தேர்வு செய்ததன் மூலம், அவர்களது மருத்துவராகும் கனவு நனவாகிறது.முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் முடிந்து, அரசு பள்ளிகளுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லுாரிகளை தேர்வு செய்த மாணவ, மாணவியர் விபரம், மாவட்ட கல்வித்துறைக்கு கிடைக்க பெற்றுள்ளது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்ற, 27 மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்; 11 பேர் கல்லுாரிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.

எந்த மாணவர்... எந்தக் கல்லுாரி?

பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தமிழரசன் - ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை; வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுமதி, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி வசந்த் - கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி சென்னை.ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீதா - சேலம் மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவி சுரேகா - சென்னை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லுாரி; இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரதாதேவி - திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவி செல்வலட்சுமி - ஈரோடு நந்தா மருத்துவக் கல்லுாரி.பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி விஷ்ணு - மருத்துவக்கல்லுாரி, ராமநாதபுரம்; புதுராமகிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுபித்தா - பெரம்பலுார் தனலட்சுமி மருத்துவக் கல்லுாரி; வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கார்த்திக் - சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவி, ஸ்ரீ தர்ஷனி - சென்னை ராகாஷ் பல் மருத்துவக் கல்லுாரி.ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி - மதுரை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி; இதே பள்ளி மாணவி சத்யாஸ்ரீ - திருவாரூர் இந்திரா மருத்துவக் கல்லுாரி; வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி சந்திரிகா - ஈரோடு, நந்தா மருத்துவக் கல்லுாரி.பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி ருத்ரராஜன் - நாமக்கல், கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவர் கரண்தேவ் - விவேகானந்தா மருத்துவக் கல்லுாரி.வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி யுகேஷ்வேல் - ஜே.கே.கே.என்., பல் மருத்துவக் கல்லுாரி, நாமக்கல்; முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி பூர்ணசந்திரன் - எம்.எம்.சி., பல் மருத்துவக் கல்லுாரி, மதுரை; பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தியா - சென்னை, ராகாஷ் பல் மருத்துவக் கல்லுாரி.கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சந்தோஷ் - சென்னை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவர் மணிகண்டன் - கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி. மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுஜித்குமார் - கடலுார் மருத்துவக் கல்லுாரி; பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி புகழேந்தி - அரியலுார் மருத்துவக் கல்லுாரி.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியை இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுப்பு லட்சுமி, ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி சரோஜா, உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சதீஷ், ஜெய்வாபாய் பள்ளி ஷாலினி ஆகியோர் தேர்வு செய்துள்ளனர்.----------பள்ளி மேலாண் குழு மறுதேர்தல்திருப்பூர், ஆக. 25-திருப்பூர், குமரானந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுதேர்தல் நடந்தது. சிறுபூலுவப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, தேர்தல் பார்வையாளராக பங்கேற்றார்.குமரானந்தபுரம், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். மாநகராட்சி, 22வது வார்டு கவுன்சிலர், ராதாகிருஷ்ணன், 21 வது கவுன்சிலர், பத்மாவதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட 24 பேர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.----முதலுதவி பயிற்சிதிருப்பூர், ஆக. 25-திருப்பூரில், போலீசாருக்கு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், திருப்பூர் மாநகர ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு விழிப்புணர்வு, உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி வகுப்பு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ குழுவினர் மூலம் நடத்தப்பட்டது. துணை கமிஷனர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.-----நொய்யல் கரையோரம் இப்படியா?திருப்பூர், ஆக. 25-நொய்யல் கரையோர ரோட்டில், சாக்கடை கழிவுநீர் தேங்குவதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நொய்யல் ஆற்றின் இருபுறமும் புதிதாக தார்ரோடு அமைக்கப்படுகிறது; ஆற்றின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.இதனால், நகரப்பகுதியில் ரோடு நெரிசல் குறைந்து வருகிறது; ஆற்றோர ரோட்டை, அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், ராயபுரம், தீபம் பாலம் வழியாக சென்றால், அணைப்பாளையம் ரோடு வழியாக மங்கலம் ரோட்டை அடையலாம்; காலேஜ் ரோட்டுக்கும் சென்றடையலாம்.மங்கலம் ரோடு வழியாக சென்று வருவோர், புதிய ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். தார்ரோடு சரியான மட்டத்தில் அமைக்கப்படாததால், சிறிய மழை பெய்தாலும், மழைநீர் தேங்குகிறது. குறிப்பாக, எஸ்.ஆர்., நகர் அடுத்துள்ள, வீனஸ் கார்டன் அருகே, தார்ரோட்டில் மழைநீர் அதிகம் தேங்குகிறது.அப்பகுதியில், மங்கலம் ரோட்டை கடந்து வரும் சாக்கடை கழிவுநீர், அடிக்கடி ரோடு முழுவதும் குளம் போல் தேங்குகிறது. அப்பகுதி வழியாக செல்லும் பாதாள சாக்கடை, 'மேன் ேஹால்' பகுதி வழியாக, சாக்கடை கழிவு கொப்பளித்தபடி வெளியேறுவதும் தொடர்கிறது.பொதுமக்கள், நெரிசல் இல்லாத மாற்று வழியாக பயன்படுத்தும் நொய்யல் ரோடு பகுதியில், சாக்கடை கழிவுநீர் தேங்குவதை தடுப்பதுடன், மழைநீர் ஆற்றுக்குள் வடிந்து செல்லும் வகையில், வசதிகளை செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தெருவிளக்கு அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.----தொழில்முனைவோராக பயிற்சிதிருப்பூர்:'தொழில் முனைவோர் யாரும் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றனர்' என்ற நம்பிக்கை வார்த்தையுடன், கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், குறுகிய நாட்களில் சுய தொழில் பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்குகிறது, கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்.பயிற்சி நிலைய பயிற்றுனர் கோகுல கிருஷ்ணன் கூறியதாவது: அனுப்பர்பாளையம் புதுார், கனரா வங்கிக்கிளை மேல் மாடியில், பயிற்சி நிலையம் செயல்படுகிறது. மத்திய அரசின் கிராமப்புற அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, விவசாயம் சார்ந்த காளான் வளர்ப்பு, கோழி, தேனீ வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்த்தல் பயிற்சிகள், 10 நாட்கள் வழங்கப்படுகிறது. வணிக தோட்டக்கலை பயிற்சி, 13 நாட்கள் வழங்கப் படுகிறது.

ஒரு மாதப் பயிற்சி

சிறு தொழில் பயிற்சிகளாக வீட்டு ஒயரிங், குளிர்சாதன பெட்டி, ஏ.சி., பழுது பார்ப்பு; கம்ப்யூட்டர் பயிற்சி, பெண்களுக்கான தையல், எம்ப்ராய்டரி மற்றும் துணி ஓவியப்பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, மொபைல்போன் பழுது பார்த்தல் மற்றும் சரி செய்தல், போட்டோ, வீடியோகிராபி பயிற்சி, ஆண் களுக்கான அழகுக்கலை பயிற்சி, யுபிஎஸ். பேட்டரி பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்படுகிறது; இவையனைத்தும், 30 நாள் பயிற்சி.மேலும், சணல் பை தயாரிப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் பயிற்சி, செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி, 13 நாட்கள் வழங்கப்படுகிறது. காகித கவர், ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு, அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு, துரித உணவு தயாரிப்பு, போட்டோ பிரேமிங் லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரின்டிங், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி ஆகியவை, 10 நாட்களுக்கு வழங்கப் படுகிறது.பயிற்சி பெற்றவர்கள் சுய தொழில் துவங்கவும், அதற்கு தேவையான வங்கிக்கடன் பெறவும் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.பயிற்சி நிலையத்தை தொடர்புகொள்ள:94890 43923,99525 18441----சிற்பி குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு போராட்டம்அவிநாசி, ஆக. 25-திருமுருகன்பூண்டியில், பாரதி மகாலிங்கம் சிற்பக் கலைக்கூடம் உள்ளது. இதில், மகாலட்சுமி நகரை சேர்ந்த நாகராஜ், 65, என்பவர் பணியாற்றி வந்தார். இந்த கூடத்தில் தயாரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை எடுத்து கொண்டு ஒரு சிறிய வேனில் சென்றார்.திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பிரிவு அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது. இதில் நாகராஜ் மற்றும் உடன் சென்ற ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நாகராஜ் நேற்று உயிரிழந்தார்.நாகராஜ் உயிரிழந்ததற்கு அஜாக்கிரதையாகவும், போதிய பாதுகாப்பு இல்லாமல் சிலையை சிறிய வேனில் எடுத்துச் செல்ல கூறிய சிற்பக்கலை கூட உரிமையாளர் மகாலிங்கம் மீது, நாகராஜின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு, ஆம்புலன்ஸில் நாகராஜ் சடலத்தை வைத்து, சிற்பக்கலைக்கூடம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினர். அதில், சமாதானம் ஏற்பட்டதால், சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.---சிறந்த வாசகர்தான் சிறந்த படைப்பாளிஇலக்கியத்தின் மீது தீராக்காதல் கொண்டவர் சுப்பிர மணியம், 55. பிருந்தா சாரதி எனும் புனைப்பெயரில், கவிதை வரைகிறார். அவதாரம், தேவதை, ஆனந்தம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 'தித்திக்குதே' திரைப்படத்தை இயக்கிய அவர், பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 உள்ளிட்ட தமிழ்ப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில், 'புதுக்கவிதைகளில் உத்திகளும் கட்டமைப்புகளும்,' எனும் தலைப்பில் நடந்த புதுக்கவிதை பயிலரங்கத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிருந்தா சாரதி மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:இப்போதைய நம் புதுக்கவிதைகள், உலக கவிதைகளோடு, ஒப்பிடும் அளவு வளர்ந்து வருகிறது. சிறுகதை, நாவல் இலக்கியங்களில் அகில இந்திய அளவில் கவனிக்கப் படுபவையாக மாறி வருகிறது. குறிப்பாக, புத்தக கண்காட்சிகளில், தொடர்ந்து புத்தக விற்பனை அதிகரிக்கிறது. நம் கவிதை, புத்தக ரசனை வளர்வதையே இது காட்டுகிறது.

சிறந்த வாசகர் - சிறந்த படைப்பாளி

நல்ல ரசனை உள்ள ஒரு வாசகர், சிறந்த படைப்பாளியாக மாற முடியும். முதலில் நாம் அதிகம் படிக்க வேண்டும்; அப்போது தான் எழுத முடியும். மேடையில் பேசுவது ஒரு கலை. அது வளர வேண்டும். வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஆனால், இப்போது மேடை பேச்சுகளை நின்று கவனித்து கேட்பதில்லை. ஒன்று 'ரெக்கார்டு' செய்து கொள்கின்றனர் அல்லது 'யூ டியூப்' வாயிலாக பார்க்கின்றனர்; இது, இலக்கியமாக கவனம் பெறாது.ஈர்ப்பை ஏற்படுத்துவது தான் இலக்கியம். பொழுதுபோக்காக இலக்கிய கூட்டங்கள் நடக்கக்கூடாது. முழுமையான வாசிப்புக்குரியது தான் தீவிர இலக்கியம். மனிதனின் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பிறப்பிப்பது தான் இலக்கியம் அல்லது கலை.பனை ஓலை காலகட்டமாக இருந்தாலும், அச்சடிக்கும் நடைமுறையாக இருந்தாலும் சரி, டிஜிட்டல் உலகமே வந்தாலும், செயற்கை நுண்ணறிவு கோலோச்சினாலும், மனிதன் சிந்தித்துத் தான் ஆக வேண்டும்.மனிதனின் சிந்தனை, கற்பனை திறன் தான் முக்கியம். டிஜிட்டல் உலகத்தில், கவிதை உலகம் எதிர்நோக்கும் சவாலாக ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இதன் வாயிலாக ரசனை மாறும்.

கற்பனைத்திறன் எனும் அபூர்வ முட்டை

மனிதக் கற்பனைத்திறன், அபூர்வமான ஒரு முட்டை. அதில் இருந்து ஆயிரம் விதைகள் முளைக்கும்; பசியும் தீரும். ஆனால், ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் உருவாவது, ஒரு விதை; அது பயிராகும், ஆனால், பசி தீர்க்குமா என்பது தெரியாது. பசி தீராத பயிராக இலக்கியம் இருக்கக்கூடாது; கற்பனைத்திறன் மேம்பட வேண்டும்.மேலான கவிதை மற்றும் கற்பனைக்கு, உலகச் சந்தையில், கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் ஏராளம். உங்கள் சொந்த அனுபவங்கள் கூட கவிதை, கதையாகும் போது, உங்களை மேலே கொண்டு வர, சிறந்த படைப்பாளியாக்க உதவும்.இவ்வாறு பிருந்தா சாரதி பேசினார்.---------ஆயில் சிந்தியதுவழுக்கிவிழுந்த வாகன ஓட்டிகள்திருப்பூர், ஆக. 25-திருப்பூர் ரயில்வே மேம்பாலம், அவிநாசி ரோட்டில், நேற்று காலை, 11:00 மணியளவில் அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு வாகனத்திலிருந்து ஆயில் சிந்தி ரோட்டில் பரவியது. அடுத்தடுத்து வாகனங்கள் சென்ற நிலையில் இந்த ஆயில் சிறிது துாரம் ரோட்டில் பரவியது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.இதனைக் கண்ட அப்பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து சென்று ஆயில் சிந்திப் பரவிக் கிடந்த பகுதியில் மண்ணைக் கொட்டி பாதுகாப்பு ஏற்படுத்தினர். இதே பகுதியில் எதிர்ப்புறத்தில் கடந்த சில நாள் முன் இதேபோல் ரோட்டில் ஆயில் சிந்திப் பரவியது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வளைவான இந்த இடத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.-----நெசவாளர் புத்துயிர் பெற முடியுமா?திருப்பூர்:சந்தை பொதுவாக ஊருக்கு வெளியிலோ அல்லது மக்கள் கூடும் இடத்திலோ தான் இருக்கும். ஆனால், கல்லுாரிக்குள் சந்தை என்றதும் சற்றே வித்தியாசம் தென்பட்டது. ஆவலுடன், மங்கலம் ரோட்டிலுள்ள குமரன் மகளிர் கல்லுாரிக்கு சென்றோம்.களை கட்டிய கல்லுாரி சந்தையில், மாணவியர் கூட்டம் அலைமோதியது. வாய்க்கு ருசியான உணவு பொருட்கள், அழகுக்கு மெருகு சேர்க்கும் பேன்ஸி பொருட்களை வாங்கும் ஆவலில் சந்தைக்குள் அங்குமிங்கும் உலவிக்கொண்டே இருந்தனர் மாணவியர்.

'நாங்கள் தான் கடைசித்தலைமுறை'

கண்காட்சியில், கைத்தறி புடவை கண்காட்சி அரங்கும் இடம் பெற்றிருந்தது. நெசவாளி மகாலட்சுமியிடம், சந்தை நிலவரம் கேட்டோம். உடன் வந்திருந்த தன் கணவருடன் சேர்ந்து பேசினார்.''ரொம்ப வருத்தப்பட்டு சொல்றோங்க. கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபடும் கடைசி தலைமுறை நாங்களாதான் இருப்போம். ஒரு காலத்துல நெகமம் பட்டு, ரொம்ப பிரபலமா இருந்துச்சு. நிறைய பேரு வாங்கினாங்க; பெரிய பெரிய கடைக்காரங்களும் நிறைய 'ஆர்டர்' கொடுப்பாங்க.கணவன், மனைவின்னு குடும்பமா சேர்ந்து தறி ஓட்டுவோம். ஓரளவு வருமானம் வந்துச்சு. ஆனா, இப்போ, நிலைமை தலைகீழா மாறிப்போச்சு.ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் இருக்கு. ஆனா, நெசவு தொழிலில் வருமானம் போதுமானதா இல்லாததால, நெசவாளர்களின் பிள்ளைங்க எல்லாம், படிச்சு, வேற வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. 'நீங்க படற கஷ்டம், நாங்க படமாட்டோம்'ன்னு சொல்றாங்க'' என யதார்த்தத்தை கூறினர்.

கைத்தறி ஆடைகள் வாங்கணும்

''நுால் துவங்கி, பட்டு, ஜரிகை, உற்பத்தி பண்ற புடவைன்னு ஒவ்வொண்ணுக்கும் ஜி.எஸ்.டி., கட்டணும்; ரொம்ப சிரமமா இருக்கு. கைத்தறி ஆடைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க மகளிர் திட்டம் மூலமா நிறைய ஊக்குவிப்பு தர்றாங்க.இருந்தாலும், நெசவுத் தொழில் மீண்டும் செழிக்கணும்னா, அரசாங்கம் சொல்ற மாதிரி அரசு ஊழியர்கள் எல்லாம், கைத்தறி ஆடைகளை வாங்கணும். இந்த மாதிரி நிறைய கண்காட்சி நடத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்,'''கைத்தறிச்சத்தம் என்றும் ஒலிக்குமா?' என்ற சந்தேகம் தொனித்தது, இருவரின் குரலிலும்.-----கிருஷ்ண ஜெயந்தி கோலாலகம்திருப்பூர், ஆக. 25-திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, 27, 28ம் தேதிகளில் நடக்கிறது.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜெயந்தி விழா, 27 மற்றும் 28ம் தேதியில் நடக்க உள்ளது. 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற தலைப்பில், குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு, கோவில் வளாகங்களில் நடமாடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.வரும், 27ம் தேதி மாலை, 6:00 மணி முதல், திருப்பூர் கவிநயா நாட்டிய பள்ளி குழந்தைகளின், 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, அன்றயை தினம், காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரபூஜை, குழந்தை கிருஷ்ணருக்கு, சங்குப்பால் ஊட்டும் பூஜை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதியுலாவும், உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு, ஊஞ்சல் சேவையும் நடப்பதாக, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை மற்றும் கோவில் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.---குளங்களில் ததும்பிய நீர்; நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுபல்லடம், ஆக. 25--விவசாயிகளின் நிலை உணர்ந்து, சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளங்களைத் துார்வாரி மேற்கொள்ளப்பட்ட அறப்பணியால், சுற்றியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; இது, விவசாயிகளுக்கு வாழ்வின் வரமாக மாறியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளது சாமளாபுரம் குளம். நுாற்று பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம், பாசன பரப்புக்கு பயன் தருவதுடன், ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் தஞ்சமடையும் இடமாகவும் உள்ளது.சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள இக்குளம், கடுமையாக மாசடைந்து கிடந்தது. 2021ல், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தீவிர முயற்சியால், சாமளாபுரம் குளம் மட்டுமன்றி, 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளபாளையம் குளமும் துார்வாரப்பட்டது. இப்பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றும் இப்பயனை அனுபவித்து வரும் விவசாயிகள் பலர், ரோட்டரி சங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.5 மணி நேரம் தண்ணீர்கோவிந்தராஜ், பூமலுார்: பி.ஏ.பி., வாய்க்காலின் கடைமடையில் இருப்பதால், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் தூர்வாரியது எங்களுக்கு மிகவும் பயன் அளித்து வருகிறது. இங்கு, 105 அடி ஆழ விவசாயக் கிணறு உள்ளது. முன்பெல்லாம், கிணற்றிலிருந்து ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும். சாமளாபுரம் குளம் துார்வாரிய பின், கிணற்றின் நீர் மட்டம் அதிகரித்து, 5 மணி நேரத்துக்கு மேல் தண்ணீர் எடுக்க முடிகிறது. இதே முறைப்படி, குளம் - குட்டைகளை துார்வாரினால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.வற்றுவதே இல்லைதிருமூர்த்தி, ஆட்டையாம்பாளையம்:இரண்டரை ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு பெரிய அளவு பாசன வசதி கிடையாது. தண்ணீருக்காக அடிக்கடி ஆழ்துளை கிணறு அமைப்பதால், ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் துார்வாரிய பின், கிணற்றில் தண்ணீர் வற்றுவதே இல்லை என்ற நிலை உள்ளது. குளங்களை வாரிய தன்னார்வலர்களுக்கு நன்றி.விவசாயம் செழிக்கும்தியாகராஜன், பள்ளபாளையம்:நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரால் சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் நிறைகின்றன. ஆனால் பல ஆண்டாக பெரிய மழை இல்லாததால், கோவை மற்றும் வழித்தட ஊர்களில் உள்ள கழிவு நீர்தான் நொய்யலில் வருகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் வேறு வழியின்றி அதையே விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தோம். ரோட்டரி சங்கம் சார்பில் குளங்கள் துார்வாரப்பட்ட பின், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு செய்தால், இப்பகுதியில் விவசாயம் செழிக்கும்.கழிவுநீர் கலப்புபொன்னுசாமி, சாமளாபுரம்: சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களின் கரைகள் சேதமடைந்தும், முட்கள், ஆகாயத்தாமரைகள் முளைத்தும் புதர் மண்டி கிடந்தன. ரோட்டரி சங்கத்தின் மாபெரும் முயற்சியால், முட்கள், புதர்கள் அகற்றப்பட்டு குளங்கள் முழுமையாக துார்வாரப்பட்டு, குளத்தின் கரைகளும் பலப்படுத்தப்பட்டன. பலரது முயற்சியில் துார்வாரப்பட்ட குளத்தில் கழிவு நீர் கலப்பது தான் வேதனையாக உள்ளது. கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நீர் வழித்தடங்களையும், நீர் ஆதாரங்களையும் மீட்க வேண்டும்.கோடையிலும் வற்றாதுபாலசுப்பிரமணியம், நீர் மேலாண்மை குழு தலைவர், 63 வேலம்பாளையம்:குளங்கள் துார்வாரியதால், வேலம்பாளையம், பூமலுார், ஆட்டையாம்பாளையம், இடுவாய் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், கோடைக்காலத்திலும் கூட இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. பருவமழையால், சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களில் சேகரமாகும் தண்ணீரால், இங்குள்ள கிராமங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.முன்மாதிரி செயல்பாடுஈஸ்வரன், மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள்சங்க மாவட்ட தலைவர்:சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் துார்வாரப்பட்டு, நீர் செறிவூட்டப்பட்டதால், இன்று, 30 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. மேலும், கோடை காலத்தில் கூட இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. குளங்கள் துார்வாரி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும், நிலத்தடி நீர்மட்டம் குறையவில்லை. ரோட்டரி சங்கத்தின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்துவதுடன், இது ஒரு முன்மாதிரியான செயல்பாடாக கருதி நன்றி கூறுகிறோம். இதேபோல், நீர் ஆதார குளம் குட்டைகளை தூர்வாரினால், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதே இருக்காது.சரணாலயம் ஆகுமா?மொத்தம், 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாமளாபுரம் குளம், எண்ணற்ற பறவைகள் உயிரினங்களுக்கு சரணாலயமாக உள்ளது. ரோட்டரி சங்கத்தின் அறப்பணியால் பல ஆண்டுகளுக்கு இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறும் விவசாயிகள், குளத்துக்குள் கழிவு நீர், குப்பைகள் கலப்பதால், தண்ணீர் மாசுபட்டு பலரது முயற்சியும் வீணாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும், குளத்துக்குள், குப்பை மற்றும் கழிவுகள் கலப்பதை தடுத்தால், இது ஒரு சரணாலயமாக இருக்கும்.எல்லோரும் கைகோர்த்தோம்கிராமங்களைக் காத்தோம்ரகுபதி, முன்னாள் தலைவர், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம்:சாமளாபுரம் சுற்றுவட்டார பகுதியில், ஆழ்துளை கிணறு அமைத்துதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதற்கு தீர்வு காண, நொய்யல் நீரை சுத்திகரிப்பு செய்து, பம்பிங் முறையில், சாமளாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம் - குட்டைகளுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டோம். இதற்கு ஏற்பட்ட பல இடையூறுகள் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டது.தொடர்ந்து, சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களை துார்வார தீர்மானித்தோம். இதற்கு வசதியாக, நொய்யல் நீர் செல்லும் சாமளாபுரம் ராஜ வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வந்ததால், தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுவே சரியான தருணம் என்று கருதி, 2021ல், குளங்களை துார்வாரினோம். குளங்களின் கரைகளை பலப்படுத்தி, தீவுகள் அமைத்து, 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதனால், சாமளாபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஐந்து வருவாய் கிராமங்கள் பயனடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் இணைந்து செயல்பட்டதால் இதை சாதிக்க முடிந்தது. அடுத்து, வேட்டுவபாளையம் குளத்தையும் துார்வார அனுமதி கேட்டுள்ளோம்.-----------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி