கன்னிவாடியில் இனி சந்தனக் காற்று வீசும்
திருப்பூர்: வெற்றி அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், மரக்கன்று வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மரம் வளர்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதுடன், மரம் வெட்டுவதை தடுக்கவும், சட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இளம் பசுமை அமைப்பினர், தன்னார்வலர்கள், முழு நேர பணியாக மரம் நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில்,. மூன்று லட்சம் என்ற இலக்கு, 75 சதவீதம் தாண்டிவிட்டது; இருப்பினும், விவசாயிகள் மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இந்நிலையில், மூலனுார் அடுத்துள்ள கன்னிவாடி கிராமத்தில், கன்னிமார் கோவில்பாளையம் என்ற இடத்தில், மகுடபதி குல்பிர் சர்மா என்பவருக்கு சொந்தமான நிலத்தில், மகோகனி - 500, செம்மரம் -300, வேம்பு -350, சந்தனம் -300, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி மரக்கன்றுகள் தலா, 10 என, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.