உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எண்ணத்திரையை மாற்றிய சின்னத்திரை! இன்று உலக தொலைக்காட்சி தினம்

எண்ணத்திரையை மாற்றிய சின்னத்திரை! இன்று உலக தொலைக்காட்சி தினம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல், ஒரு காலத்தில் அமிர்தமாய் தித்தித்த தொலைக்காட்சி, இன்று, திகட்டும் தொல்லைக் காட்சியாக மாறிப் போயிருக்கிறது.விரல் விட்டு எண்ணக்கூடிய சேனல்களில், விரும்பிய நிகழ்ச்சிகளை தேர்வு செய்து பார்த்து, சின்னத்திரைக்குள் நேரத்தை சிறை வைக்காத தலைமுறை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று, குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, நாள் முழுக்க சின்னத்திரைக்குள் சிறைபட்டு கிடக்கும் அசாதாரண சூழ்நிலை உருவாகியிருக்கிறது.அறிவுசார்ந்த செய்திகள், மனதை மாசுபடுத்தாத பொழுதுபோக்கு மட்டுமே நோக்கம் என்ற நிலைமாறி, ஒவ்வொரு பொழுதையும் தங்களுக்கான வணிக முதலீடாக மாற்றிக்கொண்டுவிட்டன சின்னத்திரை சேனல்கள். புற்றீசல் போல் பெருகிவிட்ட சேனல்கள், தங்களின் சந்தை மதிப்பை கூட்ட, ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் வணிகமயமாக்கிவிட்டன. மெகா 'சீரியல்' என்கிற மிகப்பெரிய வணிக சந்தைக்குள், கை விலங்கிட்டது போல் சிறைபட்டுக் கிடக்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள்.மனித வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சின்னத்திரை, அலைபேசி உள்ளிட்ட ஊடகங்கள், எதிர்மறை விளைவுகளை பல இடங்களில் ஏற்படுத்தினாலும், உலகில் நடக்கும் எந்தவொரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள், அறிவாற்றல் வளர்க்கும் பல்வேறு விஷயங்களை வீடுகளின் வரவேற்பறைக்குள் கொண்டு வரும், மகத்தான தொழில்நுட்ப புரட்சியை செய்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.இதை உணர்த்தும் வகையில் தான் ஆண்டுதோறும், நவ. 21ம் தேதியை, 'உலக தொலைக்காட்சி தினம்' என அறிவித்திருக்கிறது, ஐ.நா., சபை. இந்தாண்டு,'உலகத்தோடு இணையுங்கள்' என்ற கருப்பொருளையும் வழங்கியிருக்கிறது.- இன்று உலக தொலைக்காட்சி தினம் -

திரை விலக்குவது நலன் காக்கும்!

'உணவருந்தும் போது, 'ஸ்கிரீன்' அதாவது, டிவி., மொபைல்போன் போன்வற்றை பார்த்தவாறே உணவருந்துவதை தவிர்த்து, உணவின் மீது மட்டுமே கவனம் செலுத்தி உணவருந்த வேண்டும் என்பது, ஆரோக்கியத்தின் ஆணிவேர்' என்கின்றனர், மருத்துவர்களும், மனோதத்துவ நிபுணர்களும்.'ஒரு காலத்தில் நிலாச்சோறு காண்பித்தும், மொட்டை மாடியில் விளையாட வைத்தும், குழந்தைகளுக்கு உணவூட்டிய, ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு நிலை மாறி, பிஞ்சுக் குழந்தைகளை கூட சின்னத்திரை மற்றும் அலைபேசி திரையின் ஒளி பிம்பத்திற்குள் லயிக்க வைத்து, உணவூட்டும் பெற்றோரை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இது, குழந்தைகளின் உடல், மனம் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்' எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை