அரங்கம் அதிர்ந்தது... பயம் பறந்தது!
திருப்பூர்; ''மேடை ஏறும் வரை பயமும், பதற்றமும் இருந்தது; மேடை ஏறியவுடன் கைதட்டல்கள் எழுந்ததும் உற்சாகம் பொங்கியது'' என்று, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவியர் கூறினர். திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் நேற்று 2வது நாளாக கலைத்திருவிழா நடந்தது. நேற்று மணப்பெண் அலங்காரம், மவுனமொழி நாடகம், மேற்கத்திய தனிநபர், குழு நடனம் ஆகிய நான்கு கலைப்போட்டிகள் நடந்தன. கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் தலைமை வகித்தார். குமரன் கல்லுாரி இணைப்பேராசிரியர் கோமதி, உதவிப்பேராசிரியர் ஸ்ரீசாந்தி, 'கிராவிட்டி ஆப் டேன்ஸ்' ஸ்டுடியோ இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் நடுவராகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியை பேராசிரியர் மலர் ஒருங்கிணைத்தார். அடிக்கடி நடத்த வேண்டும்
கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவியர் நம்முடன் பகிர்ந்தவை: பேச்சியம்மாள்: கலைத்திருவிழா நடனப்போட்டியில் பங்கேற்றேன். நான் இதுவரை மேடை ஏறியதில்லை. இதுவே முதன்முறை என்பதால் சற்று பதற்றமாக, பயமாக இருந்தது. ஆனால், மேடை ஏறியவுடன் அனைவரின் கைதட்டல்களும் என்னை உற்சாகப்படுத்தின. மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்த வேண்டும். கன்னிகா: எல்லா நேரத்திலும் படிப்பு மட்டுமே என்றில்லாமல் இவ்வாறான கலை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்து வதால் மன அழுத்தம் குறைகிறது. இத்திருவிழாவால் தமிழரின் பாரம்பரியக் கலைகள் மீட் டெடுக்கப்படுகின்றன. புது விழா... புது அனுபவம்
ஆதிகா: கலைத்திருவிழா மன திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. எனக்கு நடனம் பிடிக்கும், அதில் கலந்துகொண்டேன். புதிய விழா என்பதால் புதிய அனுபவம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். கவுசல்யா: கலைத்திருவிழாவால் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நடனத்திற்கு பயிற்சி எடுத்து குழுவாக செயல்பட்டோம். ஆடல், பாடல், நாடகம் என அடுத்தடுத்த போட்டிகளால் பங்கேற்கவும் கண்டுகளிக்கவும் நன்றாக இருந்தது.