தேரோடும் வீதிகளில் ஊர் கூடுது! திருப்பூர் ஆன்மிக சுற்றுலாவின் அடையாளமானது...
திருப்பூர்... தொழில் நகரம் மட்டுமல்ல; ஆன்மிக நகரமும் கூட. பெரிய கோவில்கள், சிறிய கோவில்கள் என, திரும்பும் பக்கமெங்கும் கோவில்களை காண முடியும். மாரியம்மன், சிவன், முருகன் கோவில்களில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்., மே மாதங்களில் தேரோட்டம் நடைபெறும்.இதில், மாநிலத்தின் மிகப்பெரிய தேர் உள்ள கோவில்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கிற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம், மூன்று நாட்கள், வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. தேர் வீதிகளில் ஊர் கூடி, தேர் இழுத்து, பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். பக்தர்கள்; வீதியெங்கும் விழாக்கால உற்சாகம், நிரம்பி ததும்பியது.உள்ளூர் மக்கள் மட்டு மின்றி, தொலைதுாரங்களில் வசிக்கும் அவர்களது உறவினர்கள், வெளியூரில் படிக்கும் பிள்ளைகள் என, 'சொந்த ஊர் பண்டிகை' என்ற உற்சாகத்தில் அனைவரும் வந்து சென்றனர். உள்ளூர்வாசிகளின் வீடுகள், விருந்தினர்களால் நிரம்பியிருந்தது. அதே போன்று, மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள கோவில்களிலும், விழாக்கள் களை கட்டி வருகின்றன.'இதில், ஆன்மிகம் பிரதானமாக இருக்கும் போதிலும், சுற்றுலா சார்ந்தும் இவ்விழாக்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன' என்கின்றனர் சுற்றுலாத்துறையினர்.திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறியதாவது: மாவட்ட வாரியாக, எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ, அந்த இடங்கள், அங்கு வரும் மக்கள் தொகை ஆகியவை, சுற்றுலாத்துறை சார்பில் கணக்கெடுக்கப்படுகிறது. அந்த வகையில், திருப்பூரை பொறுத்தவரை கோவில்களில் நடக்கும் தேரோட்டம் என்பது உள்ளூர் அளவில் மிக பிரபலமானதாக இருக்கிறது.தற்போது, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்து முடிந்திருக்கிறது.; பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்.உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் வசிக்கும் அவர்களது உறவினர்கள் கூட வந்து சென்றனர். இதனால், இக்கோவில் தேரோட்டம் மிகப்பிரசித்தி பெற்றதாக மாறியிருக்கிறது; சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.அதேபோன்று, உடு மலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்திலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர்.மேலும், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில்களில் நடக்கும் தேரோட்டமும் மிக அதிகளவு பக்தர்கள் கூடும் நிகழ்வாக கணக்கெடுக்கப் பட்டிருக்கிறது.பொதுவாக, தேரோட் டம் நடக்கும் மார்ச் முதல் மே வரை இக்கணக் கெடுப்பு நடக்கும். ஏராளமான கோவில்கள் திருப்பூரில் உள்ள போதும், குறிப்பிட்ட சில கோவில்களில் நடக்கும் தேரோட்டம் என்பது, மிக பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் கூட தேரோட்டம் காண மக்கள் வந்து செல்கின்றனர் என்பதும், கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.இவ்விழாக்கள் நம் பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை பிரதி பலிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் உள்ளது.மேலும், அதனை பேணி பாதுகாப்பதாகவும் அமைந்திருக்கிறது. தேரோட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு கலைநிகழ்ச்சிகளும் பாரம்பரியம், கலாசாரத்தின் அடையாளமாகவே இருக்கிறது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 70 சதவீதம் ஆன்மிக சுற்றுலா களை கட்டியிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.