ரூ.ஒரு லட்சம் கோடி இலக்கு சாத்தியமே!
திருப்பூர்: 'சீனா ஒன் பிளஸ்' நிலைப்பாடு மற்றும் வங்கதேசத்தில் நிலவிய குழப்பம் ஆகியவற்றால், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது; இதேநிலை தொடர்ந்தால், 2030ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை, திருப்பூர் பூர்த்தி செய்யும் என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தீபாவளி பண்டிகைக் கால ஆர்டர்கள் திருப்திகரமாக இருந்ததாக, பனியன் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். அதேபோல், அக்., மாதம் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியும், அம்மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடைகளின் பங்களிப்பு, 51 சதவீதமாக இருக்கிறது. அதேபோல், நாட்டின் மொத்த பின்னலாடை தயாரிப்பில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், ஏறத்தாழ 60 சதவீதத்தை நெருங்கிவிட்டது.ஒவ்வொரு நிதியாண்டிலும், ஏப்., முதல், ஜூலை வரையிலான ஏற்றுமதி 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். அடுத்து வரும், ஆக., முதல் நவ., வரையிலான ஏற்றுமதி மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைவாகவே இருக்கும். மீண்டும் டிச., துவங்கி, மார்ச் வரை, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏற்றுமதி நடப்பது வழக்கம்.கடந்த, 10 ஆண்டுகளில், அக்., மாத ஆயத்த ஆடை ஏற்றுமதியானது அதிகபட்சமாக, 9,387 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. கடந்த, 2019 -20 ம் ஆண்டில், 7,866 கோடி ரூபாயாக இருந்தது, 2020 -21ல், 8,651 கோடியாக உயர்ந்தது; 2021-22ம் ஆண்டில், 9,387 கோடி ரூபாயாக உயர்ந்தது. அந்தாண்டு கொரோனா தொற்று பரவியிருந்ததால், வர்த்தக வளர்ச்சி தடைபட்டது; வழக்கமான வர்த்தக வாய்ப்புகளை கவர்ந்திழுக்க முடியாமல், தொழில்துறையினர் திணறியது. இருப்பினும், 2022-23ம் ஆண்டு, 8,140 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது.கொரோனா தொற்று, உலக அளவிலான பொருளாதார மந்தநிலை, போர்ச் சூழல் காரணமாக, 2023 -24ல், வர்த்தகம் மீண்டும் பின்னோக்கி சென்றது. அந்தாண்டில், அக்., மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7,564 கோடி ரூபாயாக சரிந்தது. அப்போதைய பாதிப்பு, திருப்பூரையும் விட்டு வைக்கவில்லை. பாதிப்பு கடுமையாக இருந்ததால், அதிலிருந்து மீண்டுவர, ஏற்றுமதியாளர்கள் சுய மதிப்பீடு செய்ய துவங்கினர்.அதே நேரம் உலக நாடுகள் பசுமை சார் உற்பத்திக்கு சிறப்பு கவுரம் அளிக்க தயாராகின. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி திறமைகள், கண்காட்சிகள் வாயிலாக வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 'சீனா ஒன் பிளஸ்'
கொரோனாவுக்கு பிறகு, ஜவுளி இறக்குமதி நாடுகள், 'சீனா ஒன் பிளஸ்' என்ற நிலையை கையில் எடுத்தன; பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் 'சாய்ஸ்' இந்தியாவாக இருந்தது. குறிப்பாக, திருப்பூரை தேடிப்பிடித்து தேர்வு செய்து வருகின்றனர். அதற்கு பிறகும், வெளிநாட்டு வர்த்தகர்கள், அதிகளவில் திருப்பூரை நோக்கி வந்து, உற்பத்தி படிநிலைகளை நேரில் ஆய்வு செய்து, மனதிருப்தியுடன் சென்றனர். ரூ.2 ஆயிரம் கோடிவர்த்தகம்
கடந்த அக்., மாத பின்னலாடை ஏற்றுமதி, 10 ஆயிரத்து, 314 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறைத்து மதிப்பிட்டாலும், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளதை உறுதி செய்யலாம். நீண்ட போராட்டத்துக்கு பின், திருப்பூருக்கு புதிய ஆர்டர் வரத்து கிடைத்து வருகிறது. அதன்படி, வர்த்தகமும் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த, 2010-11ல் நிர்ணயித்தபடி, இந்தாண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை கடக்க முடியும். இதேநிலை தொடர்ந்தால், 2030ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி வர்த்தக இலக்கை, திருப்பூரால் பூர்த்தி செய்ய முடியும்.- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு!
கடந்த சில மாதங்களுக்கு முன், வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பம், கூடுதல் வாய்ப்புகளை பெற வழிகாட்டியது. ஆயத்த ஆடைகளை அதிகம் இறக்குமதி செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், நிலையான ஆட்சியும், அரசு அதிகாரமும் இயங்கும் பாதுகாப்பான நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமென தீர்மானித்தன. அதன்படியும், இந்தியாவையே நம்பிக்கையுடன் தேர்வு செய்து வருகின்றனர்.