உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெக்கலுார் சந்தை வளாகம் பார் ஆக மாறிய அவலம்!

தெக்கலுார் சந்தை வளாகம் பார் ஆக மாறிய அவலம்!

அவிநாசி,; தெக்கலுார் வாரச்சந்தை வளாகம், மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளுக்கு புகலிடமாகவும் மாறி வருகிறது.அவிநாசி அருகே தெக்கலுார் ஊராட்சியில், 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, 72 கடைகளை கடந்த பிப்., 17ம் தேதி நீலகிரி எம்.பி., ராஜா திறந்து வைத்தார். சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர்,கடைகளுக்கு மின் வசதியுடன் கூடிய விளக்குகள்,தரைத்தளம் என எதுவும் அமைக்கப்படவில்லை.மழைக்காலங்களில் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாத நிலையில் கடைகளின் முன்புறம் சேறும் சகதியுமாக உள்ளது. வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க சந்தைக்குள் சென்றுவர முடிவதில்லை. இதனால் வியாபாரிகள் தெக்கலூர் சர்வீஸ் ரோட்டில் கடைகளை போட்டு பல மாதங்களாக வியாபாரம் செய்து வருகின்றனர்.இதில், 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த ஏலதாரர் அடிப்படை வசதிகள் இல்லாமல் கடைகள் உள்ளதால் வியாபாரிகளிடம் உரிய முறையில் சுங்கம் வசூலிக்க முடியாமல் உள்ளார். சந்தை வளாகத்தைச் சுற்றிலும் முள் செடிகள், களை செடிகளான பார்த்தீனியம் ஆகியவை வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது. பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் சந்தை கடைகளை மது அருந்துபவர்கள் தங்களின் கூடாரமாக மாற்றி உள்ளனர்.சந்தை வளாகத்தைச் சுற்றிலும், பாலிதீன் கவர்கள், தின்பண்ட கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவியலாக கிடப்பதோடு, மது பாட்டில்களை உடைத்தும் ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளனர். இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளதால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். முக்கியமாக சந்தை கடைகளுக்கு மத்தியில் பயன்பாடு அற்ற நிலையில் திறந்தவெளி கிணறும் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தெக்கலுார் சந்தையின் அவல நிலை குறித்து, பி.டி.ஓ., விஜயகுமாரிடம் (கிராம ஊராட்சி) கேட்டதற்கு, ''20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சந்தை கடை வளாகத்திற்கு நடுவில் தளம் அமைப்பதற்கும், கடைகள் முன்பு கான்கிரீட் தளம் மற்றும் மின் இணைப்புகளுடன் விளக்கு பொருத்துவதற்கும் பணிகள் துவங்க, டெண்டர் விடப்பட உள்ளது; அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி