ஈஸ்வரன் கோவில் பாலம் அகற்றும் பணி துவக்கம்!
திருப்பூர், ; திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகேயுள்ள பாலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் நகரின் மையப் பகுதியில் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. ஆற்றின் குறுக்கில் நகரின் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் வளர்மதி பாலம் உள்ளது.போக்குவரத்து நெருக்கடி அதிகரித்த நிலையில், 40 ஆண்டு முன், கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு நீண்டநாட்களாக பயன்பாட்டில் இருந்த நிலையிலும், பாலத்தின் இரு புறங்களிலும் ரோடு உயர்த்தப்பட்ட நிலையில் பாலம் தாழ்வாக மாறியது.இதனால் மழை நாட்களில் பாலம் மழை நீரில் மூழ்கி, பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு இல்லாததால், நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டும் பணியை அறிக்கையோடு நிறுத்திக் கொண்டது.மாநகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால், 18 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் பணி, 2023ல் துவங்கியது.பணி துவங்கி நடந்து வந்த வேளையில் நான்கு முறை நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து கட்டுமானப் பணி பாதித்தது. தற்போது கட்டுமானப் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் தொடர்ச்சியை மேற்கொண்டு பாலம் பணியை முடிக்க வசதியாக, முன் இருந்த பாலம் இடித்து அகற்றும் பணி துவங்கியது.இப்பணி நேற்று துவங்கிய நிலையில், அவ்வழியாக வாகனப் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.பாலத்தின் இரு புறங்களிலும், உள்ள கைப்பிடிச்சுவர், மையத்தடுப்பு கற்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பாலம் மீதிருந்த தார் ரோடு இயந்திரம் மூலம் சுரண்டி எடுக்கப்பட்டது.இன்றைக்குள் பழைய பாலக் கட்டுமானம் முழுமையாக இடித்து அகற்றப்படும். புதிய பாலம் தொடர்ச்சியாக கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பாலம்
ஈஸ்வரன் கோவில் அருகே, நொய்யல் ஆற்றின் குறுக்கில், 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உயர் மட்டப் பாலம் கட்டப்படுகிறது. இது 148 மீ., நீளம், 21 மீ., அகலம், 15 மீ., அளவில் இரு வழிப்பாதையாக ரோடும், தலா 1.5 மீட்டர் அகலத்தில் இருபுறத்தில் நடைபாதையும் அமைகிறது.