தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதியில்லை
உடுமலை; தாலுகா அலுவலகத்தில், குடிநீர் வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.வளாகத்திலுள்ள இ - சேவை மையத்தில் விண்ணப்பிக்கவும், பல மணி நேரம் மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு, காத்திருக்கும் மக்கள் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன், சிறிய தொட்டியும், குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்கவில்லை; குழாய் துருப்பிடித்து, உடைந்துள்ளது. தொட்டியும் காட்சிப்பொருளாக மாறி பரிதாப நிலையில் காணப்படுகிறது.அப்பகுதியில், குப்பை குவிந்து கிடப்பதால், குடிநீர் தொட்டி இருக்கும் பகுதிக்கே யாரும் செல்ல முடியாத அவல நிலை நீடிக்கிறது.வளாகத்தில் வேறு எங்கும், குடிநீர் வசதி செய்யப்படாததால், மக்கள் திண்டாடி வருகின்றனர். பல்வேறு பிரச்னைகளுக்காக மனு கொடுக்க வரும் அலுவலகத்திலேயே, குடிநீர் பிரச்னை நிலவுவது மக்களை வேதனையடையச்செய்துள்ளது.