குப்பை பிரச்னையில் மக்களை துாண்டி விடுகின்றனர்! கலெக்டர் முன்னிலையில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
திருப்பூர்; 'குப்பை பிரச்னையில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. சிலர் மக்களை துாண்டி விடுகின்றனர்,' என கலெக்டர் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசினர். திருப்பூர் மாநகர பகுதிகளில் சேகரமாகும் குப்பை, ஆண்டாண்டு காலமாக பாறைக்குழிகளிலேயே கொட்டப்பட்டுவருகிறது. இதனால், பாறைக்குழிகள் அனைத்தும் குப்பையால் நிரம்பிய நிலையில், எல்லையை கடந்து, ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளுக்கு குப்பையை கொண்டுசெல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியநிலையில், கடந்த வாரம் முதல், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அதற்கும், முதலிபாளையம் சுற்றுப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வகையில், 280 பேரை கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தபோதும், செல்ல மறுத்து, மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாறைக்குழியில் குப்பை கொட்டுவதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் அமித், போலீஸ் துணைகமிஷனர் பிரவின் கவுதம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் பங்கேற்றனர். அன்பகம் திருப்பதி (மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்) மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, போக்கால அடிப்படையில், அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று, 28 நுண் உர உற்த்தி மையங்களையும் (எம்.சி.சி.,) முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இதன் வாயிலாக, தினமும் 140 டன் கழிவுகளை கையாள முடியும். முதலிபாளையத்தில், சில அமைப்புகள், மக்கள் மத்தியில் விஷ பிரசாரத்தை துாண்டி விடுகின்றனர். போராட்டக்காரர்கள், எங்களையும் அழைத்தனர். அரசியல் அக்கறையோடு, மக்களின் விழிப்புணர்வோடு, குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமேதவிர, எந்த விதத்திலும் நாங்கள் அரசியல் செய்யவில்லை. எம்.எல்.ஏ., மற்றும் மேயர் என்ன முடிவெடுத்தாலும், கவுன்சிலர்களாகிய அனைவரும் ஆதரவாக இருப்போம். நாகராஜ் (ம.தி.மு.க.,), கவுன்சிலர்: கடந்த 15 ஆண்டுகளாக தீராத பிரச்னையாக, குப்பை பிரச்னையை இருக்கிறது. ஒருபுறம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; இன்னொருபுறம் குப்பையை எடுக்கச்சொல்லி பிரச்னை செய்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் மீது குறை சொல்வதற்கென்றே ஒரு குரூப் இருக்கிறது. குப்பை பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்கின்றனர்; இந்த நவீன காலத்தில், இங்கு நடப்பவை அனைத்தும் முதல்வருக்கு தெரியும். குப்பை பிரச்னையால், கவுன்சிலர்களாகிய எங்களுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. குப்பை பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவேண்டும். இவ்வாறு, கவுன்சிலர்கள் தங்கள் கருத்துகளை பேசினர். ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியேவந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம், நிருபர்கள் கூட்டம் குறித்து கேட்டதற்கு, மழுப்பலாக பேசிவிட்டு, புறப்பட்டுசென்று விட்டார்.
பயந்தால் நிர்வாகம் நடத்த முடியுமா?
எங்கெங்கோ இருந்து வந்து சிலர், பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது என போராட்டம் நடத்துகின்றனர். நாம் பார்த்துக்கொண்டிருந்தால், பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஜனநாயகத்தில் கூட கொஞ்சம் சர்வாதிகாரம் அவசியமாகிறது. காவல்துறை ஏன் அதனை கையிலெடுக்க தயங்குகிறது. புதிதாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் வந்து விட்டனர். ஒவ்வொருவருக்கும் பயந்தால், எப்படி நிர்வாகத்தை நடத்தமுடியும். ஒரு சினிமாவில் வரும் வடிவேலு போல, 'கதவை சாத்திவிட்டு அவன் ஓடினால், நாம் துரத்திக்கொண்டு போகலாம். அவன், எதையாவது எடுத்துக்கொண்டு நம்மை நோக்கி ஓடிவந்தால், நாம் திரும்பி ஓடலாம்,' என்கிற கதையாகத்தான் இருக்கிறது. சிரிப்பதற்காக சொல்லவில்லை; சிந்திப்பதற்காக சொல்கிறேன், என்றார். - கோவிந்தராஜ் மாநகராட்சி 3ம் மண்டல தலைவர்