திருக்குறள் கலை இலக்கிய போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
உடுமலை: திருவள்ளுவர் திருக்கோட்டத்தில், மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. உடுமலை அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில், மாணவ, மாணவியருக்கான கலை இலக்கியப்போட்டிகள், கடந்த, 25 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நடப்பாண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான கலை இலக்கிய போட்டிகள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருக்குறள் சார்ந்து, பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், ஓவியப்போட்டிகள் நடந்தன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில், குழந்தைகள் திருக்குறளை பொருளோடு சேர்ந்து ஒப்புவித்தனர். ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்ட ஓவியம் வரைந்த மாணவர்களின் ஓவியத்தை, ஏன் இந்தத் தலைப்பில் வரைந்தோம் என்பதை அவர்களே மனமுவந்து விளக்கிப்பேசினர். திருக்குறள் போட்டிகளை சிவசக்தி காலனி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் புவனேஸ்வரி, திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் தலைவர் அருள் கணேசன், துணைத்தலைவர் செல்வராஜ், செயலாளர் சிவகுமார், ஆசிரியர் மதன் மற்றும் தேசிய நல்லாசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள் அருட்செல்வன் பால்கென்னடி செய்திருந்தனர்.