நுாலகத்துறை சார்பில் திருவள்ளுவர் தின விழா
திருப்பூர்; பொது நுாலகத்துறை, மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், திருப்பூர் பார்க் ரோடு மாவட்ட மைய நுாலகத்தில் 'அய்யன் திருவள்ளுவர் தின விழா' ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.துவக்க நாளான நேற்று, கலெக்டர் கிறிஸ்துராஜ் திருவள்ளுவர் சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தார். 'நான் ரசித்த வள்ளுவம்' எனும் தலைப்பில் கவிஞர்கள் முத்துச்சாமி, நாதன்ரகுநாதன், மோகன்ராம், ஜெயக்குமார், கோகிலா உள்ளிட்டோர் பேசினர். திருக்குறள், திருவள்ளுவர் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் மாமன்ற நிர்வாகி தனலட்சுமி ஒருங்கிணைத்தார். மாவட்ட மைய நுாலக நுாலகர் தர்மராஜ் நன்றி கூறினார்.இன்று ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி நடக்கிறது. வரும், 26 முதல் 30ம் தேதி வரை திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் முற்றோதுதல், திருக்குறள் அரங்கேற்றம், பாண்டியன் நகர் தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகள் கலைநிகழ்ச்சி, போட்டி நடக்கிறது. வரும், 31ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.