இது, நோயல்ல; மனித வாழ்க்கையின் ஒரு நிலை!
''ஒரு குழந்தையின் அடிப்படை வளர்ச்சி என்பது, அதன், மனம், மூளை மற்றும் அறிவாற்றல் சார்ந்ததாக இருக்க வேண்டும். அந்த மூன்று நிலைகளில் ஏதேனும் மாற்றம் தென்படும் போது, அக்குழந்தையின் மீதான கண்காணிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.காரணம், அது, ஆட்டிசம் என்ற நரம்பியல் தொடர்புடைய பிரச்னையாக இருக்கலாம்'' என்கின்றனர் மருத்துவர்கள்.சமுதாயத்துடன் குழந்தைகளின் தொடர்பு, பேச்சு மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய படிநிலைகளில் ஒரு சில படிநிலைகளை குழந்தை எட்டாமல் போகும் போது அக்குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.'ஆட்டிசம் உள்ள குழந்தைகள் தங்களுக்கு பிடித்தவை, பிடிக்காதவை என எந்த செயலுக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்' என்பதே, அவர்களுக்கான அடையாளம்.''குழந்தைகளின் அறிவு மற்றும் சிந்திக்கும் திறனை, தகுந்த நேரத்தில் பிரயோகிக்க முடியாத ஒரு நிலை தான், ஆட்டிசம். மரபணு மாற்றம், வயதான பெற்றோருக்கு குழந்தை பிறப்பு, சுற்றுச்சூழல் நச்சுகளின் தாக்கம், குறை பிரசவம், வளர்சிதை மாற்றம், தாய்வழியிலான வைரஸ் தொற்று என, ஆட்டிசம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன'' என்கிறார், சக்ஷம் எனப்படும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்தினசாமி.அவர் மேலும் கூறியதாவது:கடந்த, 2023 புள்ளிவிபரப்படி, 36 பேரில், ஒருவருக்கு இந்த பாதிப்பு உள்ளது என கூறப்படுகிறது. இது, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 22 சதவீதம் அதிகம் என, அமெரிக்கன் ஆட்டிசம் சொசைட்டி தெரிவிக்கிறது. நம் நாட்டில், 68 பேருக்கு ஒருவருக்கு இந்த குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.ஆட்டிசம் என்பது, நோயல்ல; மனித வாழ்க்கையில் ஒரு நிலை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும். ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக வலம் வருகின்றனர். பள்ளிகளில், இக்குறைபாடு உள்ளவர்களை பாகுபாடுடன் நடத்தக்கூடாது.ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களது போக்கிலேயே சென்று, அன்றாட பணிகளை அவர்களே செய்து கொள்ள வழிகாட்டுவதும், பயிற்சி வழங்குவதும் தான், அக்குழந்தைகளின் மேம்பாட்டுக்கான வழி.அதனால் தான், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள், அதற்கான பயிற்சியை பிரத்யேகமாக பெற்று, தங்கள் குழந்தைகளை பராமரிக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இன்று (ஏப்., 2),உலக ஆட்டிசம் தினம்