இந்த பாறைக்குழியும் ஒரு நாள் நிரம்பும்! தொலை நோக்கு திட்டமே நிரந்தர தீர்வு
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில், நாளொன்றுக்கு 750 டன் குப்பை சேகரமாகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஏதுமில்லை. வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, ஆண்டாண்டு காலமாக பாறைக்குழிகளிலேயே கொட்டப்பட்டு வருகிறது. பகுதி பாறைக்குழிகளெல்லாம் குப்பையால் நிரம்பியதால், கிராமப்புறங்களுக்கு கொண்டுசெல்லும் முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒருபக்கம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; மற்றொரு புறம் தேங்கிய குப்பையை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். செய்வதறியாது திகைத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு, முதலிபாளையத்தில், காலாவதியான பாறைக்குழி ஒன்று கிடைத்தது. இதனால், வார்டுபகுதிகளில் தேங்கிய குப்பைகள் இரவு பகலாக அகற்றப்பட்டு, பாறைக்குழிக்கு கொண்டுசெல்லும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. குப்பை பிரச்னை, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்திவருவதை சுட்டிக்காட்டியும், நிபுணர் குழுவை திருப்பூருக்கு அனுப்ப வேண்டும், குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும்வகையில் திட்டங்களை உருவாக்கவேண்டும் என, கடந்த மே மாதம், தமிழக முதல்வருக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கடிதம் அனுப்பினார். ஆனால், அரசு தரப்பில், எதிர்பார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 'திஷா' கூட்டத்தில், எம்.பி., சுப்பராயன் குப்பை பிரச்னையை கிளப்பினார். மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; எந்த காலத்துக்குள் குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; மாநகராட்சி கமிஷனர் சொன்னால் நல்லாயிருக்கும் என்றார், எம்.பி., கலவை கழிவுகளே பிரச்னைக்கு காரணம் எம்.பி.,யின் கேள்விகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அளித்த பதில் வருமாறு: கலவை கழிவுகளை கையாளுவதுதான் பிரச்சனை தருவதாக உள்ளது. கலவை கழிவுகளை கையாளுவதற்கு உடனடி திட்டங்கள் ஏதும் கைவசம் இல்லை.வீடு வீடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பை உருவாகும் இடத்திலேயே, குப்பைகளை தரம்பிரித்து பெறுவதற்கான நடவடிக்கை எடக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக, மக்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, உலர் கழிவுகளோடு, ஈரப்பத கழிவுகள் கலப்பதை குறைக்க முடியும். இவ்வாறு அவர் பதிலளித்தார். பாறைக்குழியில் குப்பை கொட்டுவது என்பது தற்காலிக தீர்வுதான். தற்போது கிடைத்துள்ள பாறைக்குழியும், ஒருநாள் நிரம்புவது நிச்சயம். அப்போது மீண்டும் இதே குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். எப்படியோ பாறைக்குழி கிடைத்துவிட்டது; நிரம்பும்போது பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாக இருக்ககூடாது.
நிரந்தர தீர்வு அவசியம்
'மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியில் முறைகேடு நடக்கிறது' என, விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி, மாவட்டம் முழுக்க குப்பை பிரச்னை பெரிதாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது வியப்பளிக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் குப்பை மேலாண்மை விவகாரத்தில், வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என, மேயர் கூறினார். ஆனால், ஆர்.டி.ஐ.,-ல் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை விளக்கம் தரவில்லை. குப்பை பிரச்னை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நாங்கள் வழக்கு தொடுத்துள்ள நிலையில், தீர்ப்பாயம் கேட்ட கேள்விக்கும், இதுவரை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் தரவில்லை. 'பாறைக்குழியில் அறிவியல் ரீதியான ஆய்வு அடிப்படையில், சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத நிலையில் தான் குப்பை கொட்டப்படுகிறது' என, மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவது மிகக்குறுகிய கால தற்காலிக தீர்வு தான் என்பதை உணர்ந்து, அறிவியல் ரீதியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பையை அகற்ற வேண்டும். - சதீஷ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு மாநில செயலாளர்.