கொடைக்கானலுக்கு பஸ் திருப்பூர் மக்கள் விருப்பம்
திருப்பூர்: 'கோடை வாசஸ்தலங்களான, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டுக்கு பஸ் இயக்க வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள முக்கியமான கோடைவாசஸ்தலமான கொடைக்கானலில், கடந்த, 17ம் தேதி பிரையட் பூங்காவில் கோடை விழா, மலர்கண்காட்சியும், ஏற்காட்டில் கோடை விழா கடந்த, 23ம் தேதியும் துவங்கியது. திருப்பூரில் இருந்து, 146 கி.மீ., தொலைவில் உள்ளது கொடைக்கானல்.திருப்பூரில் இருந்து நேரடி பஸ் இல்லாததால், பழநி அல்லது வத்தலகுண்டு சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது. திருப்பூரில் இருந்து, 148கி.மீ., தொலைவில் ஏற்காடு உள்ளது. திருப்பூரில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லை. சேலம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். இதனால், இவ்விரு பகுதிகளுக்கும் திருப்பூரில் இருந்து நேரடியாக பஸ்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.பொதுமக்கள் சிலர் கூறியதாவது: திருப்பூரில் இருந்து ஊட்டி கடந்து, கூடலுார் வரை பஸ் இயக்கப்படுகிறது. தினமும் ஊட்டி, கோத்தகிரிக்கு, பத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், கொடைக்கானல், ஏற்காட்டுக்கு திருப்பூரில் இருந்து நேரடி பஸ் இல்லை. இரண்டு அல்லது மூன்று பஸ் மாறித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் பலரும் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். பிற நாட்களில் இல்லாவிட்டாலும், வார விடுமுறை, சீசன் நாட்களில் கொடைக்கானல், ஏற்காட்டுக்கு டிக்கெட் முன்பதிவுடன் கூடிய பஸ்களை இயக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.