பீனிக்ஸ் பறவையாக மீண்டெழும் திருப்பூர்! நடப்பாண்டில் 10 சதவீத வளர்ச்சிக்கு இலக்கு
திருப்பூர் : தொடர்ச்சியான சரிவு நிலையில் இருந்து மீண்டு வந்த, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது; நடப்பு ஆண்டில், 10 சதவீத வளர்ச்சி என்ற இலக்குடன் தொழில்துறையினர் உற்சாகமாக இயங்கி கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த, 2022 - 23ம் ஆண்டில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 985 கோடி ரூபாயாக இருந்தது. அடுத்து வந்த, 2023-24ல், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 304 கோடி ரூபாயாக சரிந்தது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும், சர்வதேச அளவிலான பணவீக்கம் மற்றும் போர் சூழலால், இந்தியாவுக்கான ஆர்டர் வரத்து தடைபட்டது. இயல்புநிலை திரும்பிய பிறகு, கடந்த எட்டு மாதங்களாக, மீண்டும் ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில், டிச., மாத ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த, 2022-23ல், 12 ஆயிரத்து, 216 கோடி ரூபாயாக இருந்தது, 2023-24 டிச., மாதம், 10 ஆயிரத்து, 787 கோடியாக சரிந்தது. திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த டிச., மாதம், 12 ஆயிரத்து, 427 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இயல்புநிலை திரும்பியிருக்கிறது. பல்வேறு சவால்களை தாண்டிவந்து, இன்று இயல்புநிலை திரும்பியிருக்கிறது. அதாவது, திருப்பூர் பனியன் தொழில் சீரான நிலைக்கு வந்துள்ளது. சாதகமான சூழல் நிலவுவதால், இனிவரும் மாதங்களில், வர்த்தகம் மென்மேலும் அதிகரிக்கும் என, தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து 'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' கன்வீனர் பிரபுதாமோதரன் கூறுகையில்,'' கடந்த, 2019ம் ஆண்டு ஏப்., முதல் டிச., வரையிலான ஒன்பது மாதங்களில் , ஆயத்த ஆடை ஏற்றுமதி, 94,620 கோடி ரூபாயாக (11.4 பில்லியன் டாலர்) இருந்தது; இது, 2020ல் சரிந்தது; 2021ம் ஆண்டு இயல்புநிலைக்கு வந்தது; 2023ம் ஆண்டு மீண்டும் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டின், ஏப்., முதல் டிச., வரை, 94 ஆயிரத்து, 920 கோடி ரூபாயாக (11.3 பில்லியன் டாலர்) உயர்ந்து, இயல்பு நிலைக்கு வந்துள்ளது. சாதகமான சூழல் நிலவுவதால், நடப்பாண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 10 சதவீத வளர்ச்சியை எட்ட முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.
வேலை வாய்ப்பு உயரும்...
நாம் ஒரு பில்லியன் டாலர் (8,640 கோடி ரூபாய்) அளவுக்கு ஆயத்த ஆடை இறக்குமதியை குறைத்தால், நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டு லட்சம் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். நம் நாட்டில் இயங்கும் சில்லரை விற்பனை நிறுவனங்கள், ஆயத்த ஆடை இறக்குமதியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். அதன் வாயிலாக, வேலை வாய்ப்பு உயர்வதுடன், நாடு முழுவதும் உள்ள உற்பத்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும். - பிரபு தாமோதரன்இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ்பெடரேஷன் கன்வீனர்
இறக்குமதியால் உருவாகும் பாதிப்பு
இந்தியாவில், நடப்பு (2024-25) நிதியாண்டின், ஏப்., முதல் நவ., வரையிலான முதல் எட்டு மாதங்களில், 8,900 கோடி (1.07 பில்லியன் டாலர்) மதிப்பிலான, ஆயத்த ஆடை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நமது நாடு, சீனா, ஸ்பெயின், வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்துள்ளது. கடந்த எட்டு மாதங்களில், பருத்தி ஆடை, 4,400 கோடி ரூபாய்; செயற்கை நுாலிழை ஆடை, 3,150 கோடி ரூபாய்; இதர ஆடைகள், 1,350 கோடி என,8,900 கோடி ரூபாய்க்கு ஆடைகள் இறக்குமதி நடந்துள்ளது. குறிப்பாக, 3,570 கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடை இறக்குமதியாகியுள்ளது.மாதாந்திர கணக்கீட்டின் அடிப்படையில், இந்தாண்டு 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை இறக்குமதிக்கு வாய்ப்புள்ளது. இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவது, நமது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்க செய்துள்ளது.