இன்று சிவப்பு பாண்டா தினம்
திருப்பூர்; பழுப்பு சிவப்பு நிற ரோமங்கள், அதில் வெள்ளை கோடுகள், நரி போன்ற முகம் கொண்டது சிவப்பு பாண்டா. கிழக்கு இமயமலை பகுதிகளில் அதிகளவு காணப்படும் அழகான விலங்கு. மற்ற பாண்டா கரடிகள் போலில்லாமல், இது வீட்டுப்பூனை அளவில் சிறியதாக, வால் மட்டும் பெயரிதாக இருக்கும். இது பெரும்பாலும் மூங்கில் செடிகளையும், பெரி பழங்களையும் உண்ணும். சில நேரங்களில், சிறிய பாலுாட்டிகளை வேட்டையாடும். இவை 14 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. அழிந்து வரும் உயிரினங்களில் சிவப்பு பாண்டாக்களும் ஒன்று. கடந்த, 20 ஆண்டுகளில் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் பாதி அளவிற்கும் மேலாகக் குறைந்துவிட்டன. காடுகள் அழிப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற மனித செயல்பாடுகளே இவை அழிய முக்கியக் காரணம். இதனைக் காக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று (செப்., 20) சிவப்பு பாண்டா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை பாதுகாக்க விழிப்புணர்வு, நிதி திரட்டல் போன்றவை நடைபெறும்.