இன்று கொடி காத்த குமரன் பிறந்த தினம்
நியாயமான விஷயங்களுக்கு போராட்டக் குணம் கொண்டவர்கள், எளிதில் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இப்படியான ஒரு போர்க்குணம் கொண்ட அந்த இளைஞர், பஞ்சு குடோனில் எடை போடும் குமாஸ்தவாக பணி செய்து கொண்டிருந்தாராம்.பல நேரங்களில், அவரின் பெற்றோர், குடும்பத்தினருக்கு தெரியாமல், இரவு நேரங்களில் நடக்கும் சுதந்திர போராட்டம் தொடர்பான கூட்டங்களுக்கு சென்று விடுவாராம்.அப்படி தான், ஒரு நாள், வேலைக்கு தான் செல்கிறேன் என்று கூறி சென்றவர், திரும்ப வரவே இல்லை. இது, நடந்தது, 1932ல். ஆங்கிலேயருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்க ஊர்வலத்தை நாடு முழுக்க நடத்த அழைப்பு விடுத்திருந்தார் மகாத்மா காந்தி.திருப்பூரில் நடந்த போராட்ட ஊர்வலத்தில் பங்கெடுக்க சென்ற போது, அந்த இளைஞர் போலீசாரின் பூட்ஸ் காலில் மிதிப்பட்டு, அடிபட்டு இறந்தார்.அவரது கையில் பிடித்திருந்த தேசிய கொடியை, இறுதிவரை, அவர் கீழே விட வில்லை என்பதால், கொடி காத்த குமரன் என்று பெயர். திருப்பூரில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வரிசையில், உயிர் தியாகம் செய்த திருப்பூர் குமரன், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.திருப்பூர் குமரனுக்கு இன்று பிறந்த நாள். காலை, 9:30 மணிக்கு, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில், அவரது சிலைக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவிக்கிறார்.