தக்காளி வரத்து குறைவால் விலை உயர்வு; ஒரு பெட்டி ரூ.550க்கு விற்பனை
உடுமலை : உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.உடுமலை பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், தக்காளி சாகுபடியில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில், ஏறத்தாழ, 30ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை, உடுமலை நகராட்சி சந்தை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள கமிஷன் மண்டிகள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர்.தக்காளி சாகுபடி அதிகரித்து, உடுமலை பகுதி சந்தைகளுக்கு வரத்து அதிகரித்ததால், விலை கடும் சரிவை சந்தித்தது. தினமும், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டிகள், ஒரு லட்சம் வரை விற்பனைக்கு வந்தன.வரத்து அதிகரிப்பு காரணமாக, 14 கிலோ பெட்டி, ரூ. 100 ஆக சரிந்தது. இதனால், பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுபடியாகாத நிலையில், செடிகளில் காய்கள் பறிக்காமல், வயல்களிலேயே விடப்பட்டது.தற்போது, சாகுபடி பரப்பு குறைந்து, தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இதனால், தொடர்ந்து, தக்காளி விலை உயர்ந்து வருகிறது.நேற்று உடுமலை சந்தையில், ஒரு பெட்டி, ரூ.500 முதல், 550 வரை ஏலம் போனது. மீண்டும் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.