உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து மாற்றம்; சிக்கல் களையப்படுமா? சுரங்கப்பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றத்தில்... சாலைகள் சரியில்லை; ஆக்கிரமிப்புகளும் எக்கச்சக்கம்

போக்குவரத்து மாற்றம்; சிக்கல் களையப்படுமா? சுரங்கப்பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றத்தில்... சாலைகள் சரியில்லை; ஆக்கிரமிப்புகளும் எக்கச்சக்கம்

திருப்பூர்: பார்க் ரோட்டில் சுரங்க பாலம் கட்டுமானப் பணிக்காக, நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போக்குவரத்து மாற்றத்திற்கேற்ப சாலைகளை சீராக்குவதும், நடைமுறையில் மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வருவதும் அவசியம். திருப்பூரின் மையமாக உள்ள குமரன் ரோட்டில், நொய்யல் ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி, சுரங்க பாலம் கட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பணி தடைபட்டு மீண்டும் துவங்கி துரிதமாக நடந்து வருகிறது. பார்க் ரோட்டிலும், யுனிவர்சல் சந்திப்பு ரோட்டிலும், ஆழமான குழி தோண்டி பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது பிரதான ரோட்டின் குறுக்கில் சுரங்கம் தோண்டி கட்டுமானப்பணி மேற்கொள்ள வேண்டும். இதற்காக, வாகனப் போக்குவரத்தை திருப்பி, பணியைத் தொடர அதிகாரிகள் திட்டமிட்டனர். அவ்வகையில், நாளை (நவ. 1ம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தி ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் மாநகர போலீசார் வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்க தொடர்பு எண்ணும் வழங்கியுள்ளனர்.

சிக்கலும், தேவைப்படும் மாற்றமும்

1. குமரன் ரோட்டிலிருந்து வரும் கனரக வாகனங்கள் சாய்பாபா கோவில், யுனிவர்சல் சந்திப்பு, வளம் பாலம் வழியாக நொய்யலை கடந்து முத்துசாமி ரோட்டில் வளர்மதி பகுதியை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் ஆரம்பம் முதல் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக பல இடங்களில் உள்ளது. மின் மயான ரோட்டில் பாதி வரை மண் குவியல் கிடக்கிறது. இவை முற்றிலும் சரி செய்யப்பட வேண்டும் 2. நடராஜா தியேட்டர் பாலம் அருகே, நொய்யல் கரையில் புதிய ரோட்டில் வாகனங்கள் திரும்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய ரோட்டின் மையத்தில் உள்ள மின் கம்பம் இடம் மாற்றப்படாமல் ரோட்டின் மையத்தில் உள்ளது. 3. நொய்யலின் குறுக்கே கட்டியுள்ள புதிய பாலம் அணுகு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் ரோட்டில் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பாலம் வழியாக தற்போதுள்ள ஒரு வழிப்பாதை நடைமுறைக்குப் பதிலாக இரு வழிப்பாதை அறிவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மங்கலம் ரோடு செல்லும் வாகனங்கள் எந்த தடையுமின்றி, ஆலங்காடு வழியாக, தாடிக்கார முக்கு பகுதியை மிக எளிதில் அடைய முடியும். 4. மங்கலம் ரோட்டிலும், தாடிக்கார முக்கு வழியாக மாநகராட்சி சந்திப்பு வரை உள்ள ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்றினால் வடக்கு பகுதிக்குச் சென்று திரும்பாமல் இவ்வழியாக வரும் வாகனங்கள் எளிதில் மாநகராட்சி சந்திப்பை அடைந்து, முனிசிபல் ஆபீஸ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் காமராஜ் ரோட்டை அடையலாம். 5. நடராஜா தியேட்டர் ரோடு மற்றும் மங்கலம் ரோடு ஆகிய இரு ரோடுகளும் அகலமாக இரு வழிப்பாதைக்கு ஏற்ற வகையில் உள்ளது. ரோட்டோர ஆக்கிரமிப்புகள், வாகன பார்க்கிங் போன்ற இடையூறுகள் இல்லாமல் கண்காணித்தால் இந்த மாற்றம் போலீசுக்கு தலைவலியை குறைக்கும். வாகனங்களும் எளிதில் செல்ல ஏதுவாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை