உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
உடுமலை உழவர் சந்தை ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் பிரச்னைக்கு, எந்த துறையினரும் நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை கபூர்கான் வீதியில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக, நகரிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த ரோட்டிலேயே செல்ல வேண்டும்.ரயில்வே ஸ்டேஷன் பஸ் நிறுத்தம் முதல் ராமசாமி நகர் ரயில்வே கேட் வரை, உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் ரோடு காணாமல் போகும் அளவுக்கு, தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. உழவர் சந்தையிலிருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு, ரோட்டின் இருபுறங்களிலும், காய்கறி கடைகள் அமைப்பதுடன், பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும், நடமாடும் விற்பனை வாகனங்களை தாறுமாறாக நிறுத்திக்கொள்கின்றனர்.இந்த நெரிசலில், தத்தளித்தபடி, பிற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. கிளை நுாலகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள், உழவர் சந்தை ரோட்டில் இணைய முடியாமல், சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது.எனவே, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போக்குவரத்து போலீஸ் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.