| ADDED : டிச 03, 2024 09:37 AM
திருப்பூர்; ரயில் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், சாகச 'ரீல்ஸ்' தயாரிப்போர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தண்டவாளத்தில் பொருட்களை வைத்தல், வாகனங்களை இயக்குதல், நீண்ட நேரம் தண்டவாளத்தில் பிரவேசித்தல், சாகசங்களை செய்து வீடியோ எடுத்தல், சமூக வலைதளங்களில் பதிவேற்றுதல் போன்றவை, சமீப காலமாகத் தொடர்கின்றன. இச்செயல்கள் சில நேரங்களில் உயிர்களையும் பறிக்கின்றன; ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் சிக்கல் ஏற்படுகிறது.இதையடுத்து, ''ரயில் இயக்கத்துக்கு அச்சுறுத்தலாக 'ரீல்ஸ்' எடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விதிமுறை மீறுவோர் மீது எந்தவித கருணையும் காட்ட வேண்டாம். வழக்கு பதிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே வாரியம் தரப்பில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், சென்னை, வியாசர்பாடி, ஜீவா காலனி ரயில்வே ஸ்டேஷனில், 'ரீல்ஸ்' எடுக்கும் ஆர்வத்தில், கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான முறையில் நடந்துகொண்டனர். சிலர் மீது வழக்கு பதியப்பட்டது. இதன் அடிப்படையில் இத்தகைய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.