நாய் கடித்ததும் சிகிச்சை முக்கியம்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பொது மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர், பொது அறுவை சிகிச்சை நிபுணர் சுகுமார் கூறியதாவது:நாய் கடித்து விட்டால், முதலில் நாய் கடித்த இடத்தை வேகமாக வரும் பைப் தண்ணீரில் முழுமையாக கழுவ வேண்டும். தண்ணீரை ஊற்றி, கழுவாமல், பைப்பில் வேகமாக வெளியேறும் தண்ணீரில் கடிபட்ட இடத்தை கழுவ வேண்டும். அதிகமாக ரத்தம் வெளியேறினால், சுத்தமான துணியை வைத்து, ரத்தம் வெளியேறாத வகையில் லேசாக கட்ட வேண்டும்.பின், மருத்துவமனைக்கு வர வேண்டும். மருத்துவமனை வருவோருக்கு முதலில் டி.டி., ஊசி போடப்படுகிறது. அதன் பின், நாய் கடித்த நாளில் ஒரு ஊசி, மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28வது நாள் என நான்கு தடுப்பூசி போடப்படுகிறது. நான்கு ஊசியும் போட்டு விட்டால், ரேபிஸ் பாதிப்பை தடுக்க முடியும்.கடி தீவிரமாக இருந்தால், புண்ணை சுற்றிலும், ஊசி போட்டு, ஒரு நாள் உள்நோயாளியாக அனுமதிக்கிறோம். ஊசிகளின் தன்மைக்கு ஏற்ப உடலில் ஏதேனும் மாறுபாடு உள்ளதா என்பதை ஆராய்ந்த பின், அலர்ஜி இல்லையெனில், மறுநாள் அனுப்பி விடுகிறோம்.கடிபட்ட இடம் லேசாக இருந்தால், தையல் போடுவதில்லை. காயம் தீவிரமாக, ஆழமாக இருந்தால் தான் தையல் போடப்படுகிறது. கண், காது, உதடு உள்ளிட்ட இடங்களில் தசை கிழிந்திருந்தால், தையல் போட்டு விடுகிறோம்.ரேபிஸ் வந்த பின் குணப்படுத்துவது கடினம்; மருத்துவ முறைகளும் சிரமம்.நாய் கடித்தவர்களுக்கு துவக்கத்தில் அளிக்கும் சிகிச்சை முக்கியம். ஆகையால் தான் நாய்க்கடி தீவிரமாக இல்லாவிட்டாலும், மூன்று ஊசிகளை போடச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு சுகுமார் கூறினார்.
ஒரு மாதத்தில் ரேபிஸ் வர வாய்ப்பு
''நாய்க்கு, ரேபிஸ் பாதிப்பு இருந்தால், அடுத்த ஒரு மாதத்தில் நாய்க்கடி பட்டவருக்கும் ரேபிஸ் வர வாய்ப்புள்ளது. மூச்சு வாங்குவதும், தண்ணீரைக் கண்டால் பயம் ஏற்படுவதும், காற்று லேசாக அடித்தாலும் குளிர துவங்கி, நடுக்கம் ஏற்படுவதும் ரேபிஸ் அறிகுறிகள்.ரோட்டில் சுற்றித்திரியும் தெருநாய், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி எவை கடித்தாலும் பாதிப்பு ஒன்று தான். நாய் கடிக்காமல் இருக்க, கவனம், விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வேளை நாய்க்கடிக்கு ஆளானால், உடனடியாக சிகிச்சை பெற முயற்சிக்க வேண்டும்'' என்றார் பொது மருத்துவப்பிரிவு உதவிப் பேராசிரியர் டாக்டர் சுகுமார்.