உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மும்மொழி, அதற்கு மேலும் கற்றால் தொழில்துறையில் சிறக்க முடியும்: பின்னலாடைத்துறையினர் ஆணித்தரம்

மும்மொழி, அதற்கு மேலும் கற்றால் தொழில்துறையில் சிறக்க முடியும்: பின்னலாடைத்துறையினர் ஆணித்தரம்

திருப்பூர்: 'மூன்றாவது மொழியையும், மூன்றுக்கும் அதிகமான மொழிகளையும் கற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்; வல்லமை பொருந்திய வர்த்தகர்களாக இருப்பர்' என, திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், உலக அளவில், 30க் கும் மேற்பட்ட நாடுகளுடன், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் செய்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். இதற்கு திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிற மொழிகளைப் பேசும் திறனை பெற்றிருப்பதும் முக்கிய காரணம்.தாய்மொழி, ஆங்கிலத்துடன், பிற மொழிகளையும் கற்றுத்தேர்வதே, எதிர்கால வர்த்தகத்துக்கு வழிகாட்டும் என்பதை, திருப்பூர் தொழில்துறையினர் நன்கு உணர்ந்துள்ளனர்.மூன்றாவது தலைமுறையில் பயணிக்கும், திருப்பூர் பின்னலாடை தொழிலில், இளம் தொழில்முனைவோராக இருக்கும் புதிய தலைமுறையினர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி, பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளை கற்றுத்தேர்ந்துள்ளனர்.தொழில்துறை பிரமுகர்கள் சிலரது கருத்துகள்:

மொழி தெரியாதது நெருடல்

ராஜா சண்முகம், முன்னாள் தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: ஏற்றுமதி வர்த்தகம் செய்ய ஆங்கிலம் மிக முக்கியமாக இருக்கிறது; இருப்பினும், குறிப்பிட்ட சில மொழிகளைத் தெரியாதது, ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. வியாபாரத்தில் ஆங்கிலம் மட்டும் இருந்தாலே போதும் என்று தான் இருக்கிறது. மாற்றுமொழியாக, ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகள் தெரிந்திருந்தால், அந்நாட்டு வர்த்தகர்களுடன், அவர்களின் தாய்மொழியில் பேசி, நெருக்கமாக வர்த்தகம் செய்ய முடியும். மாற்று மொழி பயிலாதது ஒரு குறையாகத்தான் தென்படுகிறது.தாய்மொழியில் பேசும் போது, நெருக்கமான வர்த்தகம் நடைபெற வாய்ப்பு கிடைக்கும். வரும் காலகட்டத்தில், அடுத்த தலைமுறையினர், தொழிலை வளர்க்கும் வாய்ப்பாக, கூடுதல் மொழி கற்றல் அமையும். ஏற்றுமதி வர்த்தகருடன் மட்டுமல்லாது, அந்நாட்டு தாய்மொழியில் பேசினால், அனைத்து தரப்பு வர்த்தகர்களுடன், தொழில் வர்த்தகம் செய்வது எளிதாகும். இளம் தலைமுறையினர், ஹிந்தி உட்பட, அதிக நாடுகளில் பேசும் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது சிறப்பானது.

பன்மொழி கற்றல் சிறப்பு

செந்தில்வேல், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்(டீமா): மூன்றாவது மொழி விவகாரத்தில், எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம். மொழி கற்றல் என்பது, சிறிய வயதில் இருந்து, பள்ளி பருவத்தில் இருந்தே துவங்க வேண்டும். அப்போதுதான், கற்றல் ஆழமாகவும், முழுமையாகவும் இருக்கும். சிறு வயதில் பன்மொழி கற்றவர்கள் வியாபாரத்துக்கு செல்லும் போது, தாய்மொழி, ஆங்கிலம் நீங்கலாக, பிற மொழிகளில் பேசி அசத்தலாம்; வர்த்தகத்தை வளர்க்கலாம். உலக அறிவு பெறவும், வர்த்தகம் செய்யவும், கூடுதல் மொழிகளை கற்றாகவேண்டும். முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், ஒன்பது மொழிகளில் சரளமாக பேசுவார். அவ்வாறு, பிற மொழிகள் தெரியும், மற்ற நாட்டு வர்த்தகர்களுடன் சரளமாக பேசி, கவர்ந்து, ஆர்டர்களை பெறலாம். தமிழகத்தில், மூன்றாவது மொழியாக பிரஞ்ச் மொழி கற்பது அதிகரித்துள்ளது. மூன்றுக்கும் அதிகமான மொழியை கற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

ஹிந்தி கற்றதால் தொழில் எளிது

பாலச்சந்தர், துணை தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா): தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது; நமது தொழில்துறையினர், வியாபாரிகள், பிற மாநிலங்களுக்கு வர்த்தகம் செய்ய அடிக்கடி சென்று வருகின்றனர். தடையற்ற வர்த்தக தொடர்புக்கு, மும்மொழி கொள்கை அவசியம். வடமாநில தொழிலாளர் இருக்கும் திருப்பூரில், வடமாநில நிறுவனங்களை போல், அதிக வர்த்தகம் செய்ய முடியாமல் போனதற்கு, மொழி தடையாக இருக்கிறது.ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், அதிக மக்கள் ஹிந்தி பேசுகின்றனர்; மிக எளிதாக, வடமாநிலங்களுடன் வர்த்தகம் செய்ய முடிகிறது. நான் தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி கற்றதால்தான், தொழில் செய்ய முடிகிறது. ஹிந்தி தெரியாவிட்டால், ஹிந்தி தெரிந்த ஒருவரை உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நம் வாழ்வு நன்றாக இருக்க, கட்டாயம் ஹிந்தியை கற்க வேண்டும்.

சமூக நீதியை பேண இதுதான் வழி

ராமன் அழகிய மணவாளன், பின்னலாடை வர்த்தக ஆலோசகர், திருப்பூர்: மேல்நிலை கல்வி வரை அரசு பள்ளியில் தான் படித்தேன்; டில்லி, பஞ்சாப்பில் மேற்படிப்புக்கு சென்ற போது, ஹிந்தி தெரியாதது கை உடைந்தது போல் இருந்தது; சாதாரண டீ கடையில் கூட ஆங்கிலத்தில் பேச சங்கடமாக இருந்தது. ஹிந்தி தெரியாததால், நமக்கு அங்கே மதிப்பில்லை.தற்போதும், ரயிலில் காட்பாடியை தாண்டி சென்றால், தமிழ்மொழியில் டீ கூட ஆர்டர் செய்து வாங்க முடியாது. மூன்று ஆண்டுகள், கல்லுாரி மாணவனாக, வடமாநிலத்தில் இருந்துள்ளேன்; கண்டிப்பாக, அதிக மக்கள் பேசும் மொழியை கற்க வேண்டும். மற்றவர் உணர்வுகளை புரிந்துகொண்டால் மட்டுமே சமமாக நடத்த முடியும்; சமூக நீதி கிடைக்கும்; அதற்கு, பிற மொழிகளையும் கற்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ