கொலை வழக்கில் ஆஜராக சென்ற சகோதரர்களை கொல்ல முயற்சி?
திருப்பூர்; கொலை வழக்கு விசாரணையில், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக டூவீலரில் சென்ற சகோதரர்களை, காரில் வந்த மர்ம கும்பல் துரத்தியது.திண்டுக்கல் மாவட்டம், குட்டப்பாறையை சேர்ந்த அசோக்குமார், 31, சந்திரசேகர், 29. சகோதரர்களான இருவரும் சேர்ந்து, சிவகுமார் என்பவரின் தந்தை நாகராஜ் என்பவரை, சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.ஜாமீனில் வந்த சகோதரர்கள் இருவரும், திருப்பூர், கோவில் வழியில் தங்கி பணிபுரிந்துவந்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, அசோக்குமார், சந்திரசேகர் மற்றும் 17 வயது சிறுவன் என மூவரும் டூவீலரில் நேற்று காலை, திண்டுக்கல் நோக்கி புறப்பட்டுச்சென்றனர்.திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே இடையன் கிணறு அருகே வந்தபோது, பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது. காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல், அசோக்குமார், சந்திரசேகர் மற்றும் சிறுவனை கத்தியுடன் துரத்தியது. அவசர எண்ணுக்கு அழைத்ததையடுத்து, அங்கு வந்த குண்டடம் போலீசார், மூவரையும் மீட்டனர். கார் மோதிய விபத்தில் காயம் ஏற்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிவகுமாரின் தந்தை கொல்லப்பட்டதற்காக பழிவாங்கும் நோக்கில் கொலை முயற்சி நடந்ததா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.