பாதாள சாக்கடை திட்டம்; கொழுந்துவிடும் விவகாரம்
திருப்பூர்; பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்புகள் வழங்கும் போது, அதற்கான மூடியை வழங்காமல் வெளி மார்க்கெட்டில் வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தற்போது பல்வேறு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வீட்டு உரிமையாளர்கள் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கான கட்டணம் மற்றும் அதற்கான குழாய்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான தொகையும் செலுத்தியுள்ளனர். அவ்வகையில் தற்போது 46வது வார்டுக்கு உட்பட்ட காஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இந்த இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணைப்புகள் தரும் இடத்தில் வீடுகளில் கழிவு நீர் வெளியேற்றும் குழாய்கள் பதித்து வந்து, சேம்பர் அமைத்து, அங்கிருந்து ரோட்டில் உள்ள பிரதான குழாயில் சென்று சேரும் வகையில் இணைப்பு வழங்கப்படுகிறது. சேம்பர் அமையும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைத்து மூடி அமைப்பு பொருத்தப்படுகிறது. காஞ்சிநகர் பகுதியில் இணைப்பு வழங்கும் ஊழியர்கள், இந்த சேம்பர் மீது அமைக்கும் மூடியை வெளி மார்க்ெகட்டில் வாங்கித் தான் பொருத்த வேண்டும். அதற்கு தொகை வேண்டும் எனக் கேட்டு 1,500 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை பல வீடுகளிலும் வாங்கியுள்ளனர் என புகார் எழுந்துள்ளது. பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டணம் செலுத்தும்போதே பொருட்களுக்கான கட்டணமும் செலுத்தப்படுகிறது. மேலும் எதற்கு ஆயிரக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று சிலர் கேட்ட போது, 'திட்டத்தில் வழங்கும் மூடி சரியில்லை. அதை பொருத்தினால் மேற்புறத்தில் வெளியே நீட்டிக் கொண்டு இடைஞ்சலாக இருக்கும். இந்த மூடியை பொருத்தினால் தரையோடு பொருந்தி விடும்' என்று தெரிவித்துள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பணம் கொடுத்து இந்த வகை மூடியை வாங்கிப் பொருத்தியுள்ளனர். டெண்டர்தாரர் தரப்பில் கூறுகையில், 'திட்டத்தில் நாங்கள் பொருத்தும் குழாய் மூடிக்குப் பதிலாக சிலர் வேறு மாடல் மூடி கேட்கின்றனர். அவர்கள் விருப்பப்பட்ட மாடல் மூடியை அவர்கள் வாங்கி கொடுத்தால் பொருத்தி விடுகிறோம்' என்றனர்.