மடத்துக்குளத்தில் குறையாத நெரிசல்; ஆக்கிரமிப்பால் அதிகரிக்கும் சிக்கல்
உடுமலை; தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, மடத்துக்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பகுதியான மடத்துக்குளத்தில், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குறிப்பாக, அமராவதி ஆற்றுப்பாலத்தில் இருந்து, நால்ரோடு சந்திப்பு வரை, அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில், ஊர்ந்து செல்லும் அளவுக்கு நெரிசல் நிலவுகிறது.இதற்கு, தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட இடத்தில், அதிகரித்துள்ள தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணமாகும்.மேலும், பல இடங்களில், நெடுஞ்சாலையை ஒட்டி, போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. இவற்றை மாற்றியமைக்க எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், காலை, மாலை நேரங்களில், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட், நால்ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.எனவே, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட நிர்வாகங்களை ஒருங்கிணைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இடையூறாக உள்ள மின்கம்பங்களை இடம் மாற்றினால், குறுகலாக உள்ள ரோட்டை விரிவுபடுத்த முடியும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மடத்துக்குளம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.