கச்சேரி வீதியில் குறையாத நெரிசல்; ஆம்புலன்ஸ் செல்லவும் சிக்கல்
உடுமலை : அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ள, கச்சேரி வீதியில், நிரந்தரமாகியுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை, தலைமை தபால் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், கோர்ட் என அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும், வரிசையாக அமைந்துள்ளன.நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கச்சேரி வீதியில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. குறுகலான ரோட்டில் இருபுறங்களிலும், வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர்.இடையிலுள்ள, சிறிய இடத்தில், அனைத்து வாகனங்களும், கடந்து செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில், இரு சக்கர வாகனங்கள் கூட அப்பகுதியை கடந்து செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் உள்ளது.அரசுத்துறை அலுவலர்களின் வாகனங்களும், நெரிசலில், சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கச்சேரி வீதியை ஒட்டி, உடுமலை அரசு மருத்துவமனையும் உள்ளது.இதனால், அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ்களும், நெரிசல் மிகுந்த கச்சேரி வீதி போக்குவரத்தில் சிக்கிக்கொள்கின்றன. இவ்வாறு, பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக இருந்தும், எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஒரு வழிப்பாதையாக அவ்வழித்தடத்தை மாற்றவும் திட்டமிடப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.நோயாளிகளின் உயிர்காக்கும் ஆம்புலன்சுக்கு கூட வழி கிடைக்காத நிலை கச்சேரி வீதியில் உள்ளது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அனைத்து துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, 'பார்க்கிங்' உட்பட விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.