உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றப்படாத மின் கம்பம்; மக்கள் அதிரடியால் மாற்றம்

மாற்றப்படாத மின் கம்பம்; மக்கள் அதிரடியால் மாற்றம்

திருப்பூர்; மின் கம்பத்தை உயரமாக மாற்றியமைக்க, 2.20 லட்சம் ரூபாயை செலுத்தியும், உயரமான கம்பம் இல்லையென்று காலம் கடத்தி வந்தது மின்வாரியம். பணம் கட்டிய நபர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு சென்றதால், மின்கம்பத்தை மின்வாரியத்தினர் நேற்று மாற்றினர். திருப்பூர் சக்தி தியேட்டர் மெயின் ரோட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரோடு அமைக்கப்பட்டபோது ரோடு உயரமானது. மின்கம்பிகள் மிக தாழ்வாக மாறியதால், கனரக வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. மின் கம்பி மீது கனரக வாகனங்கள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன், பொதுமக்கள் சார்பில், யெஸ் இந்தியா கேன் நிறுவன இயக்குனர் 'வால்ரஸ்' டேவிட், மின்கம்பத்தை உயரமாக மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்காக, மின்வாரிய அதிகாரிகள் கூறியபடி, 2.20 லட்சம் ரூபாயை கட்டினார். ஆனால், 14 அடி உயரமுள்ள மின்கம்பத்தை மாற்றாமல், 20 அடி உயரத்தில் மின்கம்பம் இருப்பதாக உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் பெறும் உரிமை சட்டத்திலும், விதிமுறைப்படி மின்கம்பி உயரமாக உள்ளதாக தவறான தகவல்களை மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது தவறான தகவல் என்று நிரூபிக்கும் வகையில், பொதுமக்கள் தரப்பில், அந்த கம்பம், 14 அடி உயரமுள்ளது என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு வீடியோவும் எடுத்தனர். அடுத்த கட்டமாக, தவறான தகவலை கொடுத்த மின்வாரியம் மற்றும் பொது ரோட்டில் இருந்த மின்கம்பத்தை மாற்ற, 2.20 லட்சம் ரூபாயை கட்டிய பணத்தை பெறும் நோக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க இருந்தனர். ''உயரமான மின்கம்பம் இருப்பு இல்லாததால் பணி தாமதமாகிறது; இதுதொடர்பாக உதவி செயற்பொறியாளரிடம் விசாரிக்கப்படும்'' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று இப்பகுதியில் உயரமான மின்கம்பத்தை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ