அமெரிக்க வரி குறைய வாய்ப்பு
திருப்பூர்: சர்வதேச சந்தையில், கொரோனாவுக்கு பின், இந்தியாவின் அமெரிக்க ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அபார வளர்ச்சி பெற்றது. அமெரிக்க இறக்குமதிக்கு, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், கடந்த ஆக., முதல் அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்தியா - அமெரிக்கா இடையே குழு அமைத்து, வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: அமெரிக்காவின் வரி 50ல் இருந்து 16 சதவீதம் வரை குறையுமென தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உறுதி செய்ய முடியும். மத்திய ஜவுளித்துறை அதிகாரிகள், மூன்று வாரத்துக்கு முன் மேற்கொண்ட'ஆன்லைன்' சந்திப்பின் போது, 'பேச்சுவார்த்தை நல்ல நிலையை எட்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் நல்ல செய்தி கிடைக்கும்' என்று கூறியிருந்தனர். வரி 25 சதவீதமாக குறைந்தால், லாபம் இல்லாமல் ஆர்டர்களை தக்க வைக்க முடியும்; 16 சதவீதமாக குறைக்கப்பட்டால், நமது பலம் கூடும்; வர்த்தகம் அதிகரிக்கும். இதே நம்பிக்கையுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.