ஓடையில் குப்பை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு
பல்லடம்; பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, கவுண்டம்பாளையம் கிராமத்தில், நீரோடை செல்கிறது. பல்வேறு கிராமங் களை கடந்து இவ்வழியாக செல்லும் நீரோடையில், குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு, ஓடையில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை, இப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், ''நீரோடைகள் தான், குளம் குட்டைகளுக்கு நீர் ஆதாரங்களாக உள்ளன. ஆனால், ஓடைகள் குப்பை கிடங்குகளாக மாறி வருகின்றன.கவுண்டம்பாளையம் வழியாக செல்லும் ஓடையில், பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி, கோழி, மீன் மற்றும் கட்டடக் கழிவுகள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன.ஊராட்சி நிர்வாகமே இந்த விதிமீறலில் ஈடுபடுகிறது. தனியாரும் இதற்குப் போட்டியாக கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். நீர் நிலையை பாதுகாக்க வேண்டியது ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு. ஆனால், ஊராட்சி நிர்வாகமே இது போன்று விதிமுறை மீறி செயல்படுவது கவலை அளிக்கிறது.கடந்த காலங்களில், குப்பைகள் கொட்டிய வாகனங்களை சிறை பிடித்து பலமுறை எச்சரித்துள்ளோம். இருப்பினும், விதிமீறல்கள் தொடர்கதையாக உள்ளன. இதனால், நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன், நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.நீர்நிலைகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தடுக்க நிரந்தர தீர்வு வேண்டும்'' என்றனர்.முன்னதாக, குப்பைகள் கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள், எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.