பல்லாங்குழியான இணைப்பு ரோடு தவிக்கும் வாகனங்கள்
உடுமலை: நான்கு வழிச்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் ரோடு, குண்டும், குழியுமாக மாறியிருப்பதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. உடுமலை அருகே அந்தியூர் பகுதியில், பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. இதனால், பொள்ளாச்சி மற்றும் பழநியில் இருந்து வரும் வாகனங்கள், பழைய தேசிய நெடுஞ்சாலையில் இணைய, அந்தியூர் இணைப்பு ரோட்டை பயன்படுத்தி வருகின்றன. இந்த ரோடு அதிக வாகன போக்குவரத்து மற்றும் தொடர் மழை காரணமாக குண்டும், குழியுமாக மாறி விட்டது. மெகா பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. குறுகலான பகுதியில், ரோட்டை விட்டு இறங்கும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு பெறும் வரை, முக்கிய வழித்தடமாக உள்ள இந்த இணைப்பு ரோட்டை புதுப்பிக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.