சுரங்கப்பாதையில் தடுமாறும் வாகனங்கள்: பராமரிப்பு இல்லாமல் அவலம்
உடுமலை: சுரங்கப்பாதை ஓடுதளம் பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி வருகின்றனர். உடுமலை - தளி ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது. ராமசாமி நகர் ரயில்வே கேட் மூடப்படும் போது, அனைத்து வாகனங்களும் இவ்வழியாகவே செல்கின்றன. காலை, மாலை நேரங்களில், தளி, திருமூர்த்திமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், இதன் வழியாகவே நகருக்குள் வர வேண்டியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதையின் ஓடுதளம் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறி விட்டது. இரவு நேரங்களில், போதிய விளக்கு வசதியும் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும் போது, நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மழைக்காலத்தில், இந்தப்பாதையில் தேங்கும் தண்ணீரால், அடிக்கடி ஓடுதளம் சேதமடைகிறது. முன்பு, ரயில்வே நிர்வாகம் சார்பில், ஓடுதள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பராமரிப்பு முற்றிலுமாக கண்டுகொள்ளப்படுவதில்லை. சுரங்கப்பாதை மட்டுமல்லாது, அப்பாதை அணுகுசாலையுடன் இணையும் இடமும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. பயன்பாட்டுக்கு வந்து நீண்ட காலமாகியும், இப்பாதையில் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தினர், குண்டும், குழியுமான சுரங்கப்பாதை ஓடுதளத்தை சீரமைத்து, அப்பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போல், உடுமலை நகரில் இருந்து ராகல்பாவிக்கு செல்லும் கிராம இணைப்பு ரோட்டில், ரயில்வே சுரங்கப்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தில் பல வாரங்களாக, தடுப்பணை போல் பல அடிக்கு மழை நீர் தேங்கியுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், பல கி.மீ., துாரம் சுற்றிச்செல்கின்றன. பாலத்தில் தண்ணீரை வெளியேற்றவும், மேற்கூரை அமைத்து, மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளே செல்வதை தடுக்கவும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.