வேலம்பட்டி சுங்கச்சாவடி; ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற கலெக்டரிடம் கோரிக்கை மனு
திருப்பூர்; வேலம்பட்டியில், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணசாமி, சரவணன், நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணாசாமி ஆகியோர் அளித்த மனு:அவிநாசிபாளையம், வேலம்பட்டியில் 4.36 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டையை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி கட்டப்பட்டது. ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கடந்த 13ம் தேதி, ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறிவிட்டு, சிறிய கட்டடத்தை மட்டும் இடித்துவிட்டு, சுங்கம் வசூலை துவக்கியுள்ளனர்.ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல், கோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால், அரசு துறைகள் மீதும், மாவட்ட நிர்வாகம் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், க.ச.எண். 40/1 ல், 4.36 ஏக்கர் இடத்தை அளவீடு செய்து, சுங்கச்சாடி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றவேண்டும். முறைகேடாக சுங்கம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.