உயர் மட்ட பாலம் கட்டணும்: கிராம மக்கள் கோரிக்கை
உடுமலை: உடுமலை அருகே, ஓடையின் குறுக்கே உயர் மட்ட பாலம் இல்லாததால், பல கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து பிரிந்து வாகத்தொழுவு கிராமத்துக்கு செல்லும் இணைப்பு ரோட்டில் உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் செல்கிறது.ஓடையில் உள்ள தரைமட்ட பாலத்தை விட சில அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. பருவமழை காலத்தில், ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்று, இணைப்பு ரோட்டில், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.எனவே, ஓடையின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டி பல கிராம மக்களின் சிரமத்தை குறைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.