நோய் பரவும் நிலையில் கிராமங்கள்; கொசு ஒழிப்பில் மெத்தனம்
உடுமலை ; குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், நோய் பரவும் நிலை உள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நீண்ட மாத இடைவெளிக்குப்பிறகு, மழை பெய்வதால், பல இடங்களில், தண்ணீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.கிராம குடியிருப்புகளிலும், முறையாக குப்பை அப்புறப்படுத்தாமல் இருப்பதால், மழைக்கு பிறகு துர்நாற்றம் வீசி வருகிறது.மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசு உற்பத்தியாகும் வகையில், பல பகுதிகளிலும், மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. மேலும், பருவமழை காலத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணிகள் குறித்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை; அப்பணிகளில், ஊராட்சி நிர்வாகத்தினரும், சுகாதாரத்துறையினரும் அக்கறை காட்டவில்லை. இதனால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தேவையான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.