திருப்பூர் : திருப்பூரில் இறக்குமதிப் பொருட்களை இறக்கும் கன்டெய்னர் லாரிகள், ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு துாத்துக்குடி துறைமுகம் செல்வது தொடர்பாக சுங்கத்துறையினர் அதிரடியாக ஆய்வைத் துவக்கியுள்ளனர். இவ்வாறு, ஏற்றுமதி ஆடைகள் கொண்டுசெல்லப்படும்போது, இடர்ப்பாடு நேரும்போது இழப்பீடோ, நிவாரணமோ ஏற்றுமதியாளர்கள் பெற முடியாத நிலை ஏற்படும். விதிமீறும் கன்டெய்னர் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழில்துறையினரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, திருப்பூருக்கு இறக்குமதி சரக்குகளை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், சரக்கை இறக்கிவிட்டு காலியாக திரும்ப வேண்டும். மாறாக, திருப்பூரில் இருந்து குறைந்த வாடகையில் ஏற்றுமதி சரக்கை ஏற்றிச்செல்கின்றன. இது குற்றச்செயல் என்றபோதிலும், இது தொடர்ந்து வந்தது. இதனால், திருப்பூர் கன்டெய்னர் லாரிகள் இயக்கம் பாதிக்கப்படுகிறது.சுங்கவரித்துறை விதிமுறைகளை மீறி, கன்டெய்னர்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள், 'இறக்குமதி சரக்கை கொண்டு செல்லும் லாரிகள், ஏற்றுமதிக்கான சரக்கை ஏற்றி வருவது குற்றம்; அத்தகைய குற்றச்செயல் தொடரக்கூடாது; நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று எச்சரித்தனர்.ஏற்றுமதி சரக்கு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'துறைமுகத்தில் இருந்து வரும் லாரிகள், சரக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது, எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. முறைகேடுகள் அதிகம் நடக்கவும் வாய்ப்புள்ளது. சுங்கவரித்துறை விரிவான கள ஆய்வு நடத்தி, விதிமுறை மீறிய சரக்கை போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.
இழப்பீடு, நிவாரணம் கிடைக்காது
ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கியத்துவமானது. வெள்ள காலத்தில், பாதுகாப்பாக அனுப்பிய சரக்கு, துாத்துக்குடி துறைமுக குடோன்களில், மழைநீர் புகுந்து சேதமானது. முறையான காப்பீடு இருந்த சரக்குகளுக்கு மட்டும், இழப்பீடு கிடைந்தது. அதுபோல், சரக்கு பரிவர்த்தனை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.திருப்பூர் ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள், விதிமுறைகளை மீறிய சரக்கு போக்குவரத்து நடப்பதாக சுங்கவரித்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, சுங்கவரித்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்தி வருகின்றனர்.துறைமுகத்தில் இருந்து திருப்பூருக்கு இறக்குமதி சரக்கு ஏற்றி வரும் லாரிகள், விதிமுறைகளை பின்பற்றாமல், இங்கிருந்து ஏற்றுமதி சரக்குகளை துறைமுகத்துக்கு ஏற்றிச்செல்வது அதிகரித்துள்ளது.ஏற்றுமதியாளர்கள் இதுபோன்ற விதிமுறை மீறிய சரக்கு போக்குவரத்தை ஆதரிக்கக்கூடாது. விதிமுறைகளை மீறி, சரக்கை ஏற்றிச்செல்லும் போது, எதிர்பாராத வகையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வித இழப்பீடு அல்லது நிவாரணம் கிடைக்காது. இறக்குமதி சரக்கு வரும் லாரிகளில், ஏற்றுமதி சரக்கை அனுப்ப, உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளோம்.- சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.