வன்கொடுமை பாதிப்பு; 111 பேருக்கு ரூ.1.01 கோடி
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, ஆதிதிராவிடர் நலத்துறையின் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் மனீஷ் நாரணவரே பேசுகையில், 'இது மிகவும் முக்கியமான ஆய்வுக்கூட்டம். ஆய்வுக்கூட்டங்களில், துறை சார்ந்த முதல்நிலை அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்,' என அறிவுறுத்தினார்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பா தேவி பேசியதாவது:மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். நமது மாவட்டத்தில் இந்தக்குழு, கடந்த 2022, டிசம்பரில் புதுப்பிக்கப்பட்டது. குழுவின் தலைவராக கலெக்டர் உள்ளார். இரண்டு அமைச்சர்கள், போலீஸ் எஸ்.பி., ஆகியோரும் உறுப்பினராக உள்ளனர்.வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், திருப்பூர் மாவட்டத்துக்கு 1.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 111 பயனாளிகளுக்கு, 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஆனாலும், பல்லடம் சாய ஆலை சம்பவத்தில், அவசர நிலை கருதி, மூன்று பேருக்கு, 18 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பின், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜா, போலீஸ் துணை கமிஷனர் தீபா, எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் உள்பட போலீசார் பங்கேற்றனர்.