ஓட்டு அரசியல்; மக்கள் ஆவேசம்
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் நேற்று கிராம சபைக்கூட்டம் நடந்தது. அதில், அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை தவிர்த்து, அறிவொளிநகர் பட்டா பிரச்னை மட்டுமே ஓங்கி ஒலித்தது. பொதுமக்கள் பேசியதாவது: கடந்த, 32 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இங்கு வசித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், சப் கலெக்டர், தாசில்தார் என, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில் யார் சொல்வது உண்மை என்றே தெரியவில்லை. பல்லடம் எம்.எல்.ஏ., இதுதொடர்பாக எட்டிக் கூட பார்க்கவில்லை. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., இங்கு வந்து எதற்காக கருத்து கூறுகிறார்? இங்கு, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறோம். 32 ஆண்டாக பெற்றுக்கொண்ட வீட்டு வரி ரசீதை திடீரென நிறுத்தியது ஏன்? எதுவும் செய்ய முடியாது என்றால், எங்களை இங்கிருந்து விரட்டி விடுங்கள். பட்டா வழங்குவதாகக் கூறி, மக்களை ஏமாற்ற வேண்டாம். ஓட்டுக்காக, எங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகளும், மாறிமாறி வெவ்வேறு கருத்தை கூறி, எங்களை குழப்பமடைய வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார். -- ஆறுமுத்தாம்பாளையத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அறிவொளி நகர் பட்டா ஒருங்கிணைப்பு குழுவினர். வருவாய்த்துறை ஏன் வரவில்லை? 'பட்டா குறித்த கேள்விக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் தான் பதிலளிக்க வேண்டும்' என, ஊராட்சி செயலர் காந்திராஜ் கூறினார். இந்த பதிலை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், 'வருவாய்த்துறை அலுவலர்கள் ஏன் கூட்டத்துக்கு வரவில்லை? கூட்டத்தில் பங்கேற்று துறை ரீதியான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியது அவர்கள் கடமை. இல்லையெனில், கூட்டம் நடத்த வேண்டாம்,' என்றனர்.