உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூலி உயர்வு ஒப்பந்தம் ஓகே; விசைத்தறி இயக்கம் துவங்கியது

கூலி உயர்வு ஒப்பந்தம் ஓகே; விசைத்தறி இயக்கம் துவங்கியது

திருப்பூர்; கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர் கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், விசைத்தறிகள் இயங்கத் துவங்கின. திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். நெசவு கூலியை உயர்த்தி அறிவிக்கவும், அதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், இரு மாவட்டங்களிலும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். தீர்வு ஏற்படாத நிலையில், கால வரையற்ற உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளின் முடிவில், கூலி உயர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த இரு நாட்களாக இப்பகுதிகளில் விசைத்தறிகள் இயக்கம் துவங்கியது.கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை திருப்பூர் மேயர் தினேஷ்குமார், இரு தரப்பினரிடமும் மேற்கொண்டார். அவ்வகையில் அவரது முயற்சி இப்பிரச்னையில் முக்கியமான பங்காக அமைந்திருந்தது. இந்நிலையில், கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்ததால், விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று காலை மேயரை சந்தித்து, சோமனுார், தெக்கலுார், அவிநாசி, கண்ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி சங்க நிர்வாகிகள் நன்றி கூறினர்.சோமனுார் சங்க செயலாளர் பூபதி கூறியதாவது:விசைத்தறி கூலி உயர்வு பிரச்னையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டு போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக, தமிழக முதல்வர், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோருக்கும், இரு மாவட்ட கலெக்டர்களுக்கும் விசைத்தறியாளர் சங்க கூட்டுக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ