நீர்நிலைகள் கரையில் எச்சரிக்கை பலகை; விபத்துகளை தடுக்க தேவை
உடுமலை : தொடர் மழையால், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள நீர்நிலைகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், விபத்துகளை தவிர்க்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.குடிமங்கலம் ஒன்றியத்தில், முக்கிய நீராதாரமாக உப்பாறு மழை நீர் ஓடை உள்ளது. இந்த ஓடையுடன் பல கிராம மழை நீர் ஓடைகள் இணைந்து உப்பாறாக மாறி, தாராபுரம் நோக்கி செல்கிறது.போதிய பராமரிப்பு இல்லாமல், சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பிலுள்ள இந்த ஓடைகளில், தொடர் மழைக்குப்பிறகு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீரோட்டம் அதிகரித்துள்ளது.மேலும், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதையடுத்து, வழியோரத்திலுள்ள, 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. சில குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கடந்தாண்டு, லிங்கமநாயக்கன்புதுாரில், குளத்தில், குளிக்கச்சென்ற இளைஞர் உயிரிழந்தார்; பண்ணைக்கிணறு ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள், அருகிலுள்ள நீர் நிலையில் மூழ்கி உயிரிழந்தனர்.இதையடுத்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள குளம், குட்டைகளில், குளிக்கக்கூடாது உள்ளிட்ட வாசகங்களை உள்ளடக்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்த பலகைகள் தற்போது மாயமாகியுள்ளது.தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஆர்வம் மிகுதியால், ஓடை மற்றும் தடுப்பணைகளில் மீன் பிடிக்கவும், குளிக்கவும், மக்கள் அதிகளவு செல்கின்றனர்.எனவே, விபத்து, உயிரிழப்புகளைத்தடுக்க உடனடியாக அனைத்து நீர்நிலைகளிலும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்துக்கு வழிகாட்டுதல் வழங்கவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.