நீர் வரவில்லை; வாய்க்கால் எதற்கு? பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம்
பல்லடம்; சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், பாசன விவசாயிகள், பல்லடம் பி.ஏ.பி., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''தண்ணீரே வராத வாய்க்கால் எதற்கு; அகற்றி விடுங்கள். பொங்கலுாருக்கு சரியாக வரும் தண்ணீர் இங்கு மட்டும் ஏன் வருவதில்லை? பல்லடம் புறக்கணிக்கப்படுகிறதா? வாய்க்காலை சீரமைத்தால் மட்டுமே தீர்வு என்று கூறுகிறீர்கள்.எனில், அதை யார் சீரமைப்பது? அதிகாரிகளால் முடியவில்லை எனில் எங்களுக்கே டெண்டர் கொடுங்கள்'' என ஆவேசத்துடன் கூறினர்.பின் விவசாயிகள் அளித்த மனு:சாமளாபுரம் மற்றும் பூமலுார் பாசன சபைகளுக்கு உட்பட்ட பகுதிகள் பி.ஏ.பி.,யின் கடைமடை பகுதிகளாகும். மேடாக அமைந்துள்ளதால், இதர பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பின் போது செல்லும் நீரின் வேகம், மணிக்கு, 3 கி.மீ., உள்ள நிலையில்.எங்கள் பகுதிக்கு, 3 மணி நேரத்துக்கு, ஒரு கி.மீ., என்ற வேகத்தில் தான் நீர் செல்கிறது. ஒவ்வொரு முறை நீர் திறப்பின் போதும், ஜீரோ பாயின்டில், நீரின் அளவை, 3 அடியில் இருந்து, 4 அடி என்று உயர்த்தினால் மட்டுமே எங்கள் பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைக்கும்.அணையில் போதிய நீர் இருந்தும், இதுவரை எங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தண்ணீர் வினியோகிக்கும் போது, குறிப்பிட்ட அந்த சபை அமைந்துள்ள இடத்துக்கு எவ்வாறு நீர் வழங்கினால் சரியாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து அதன்படி தண்ணீர் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.