நீர்நிலை கரையில் சீர்கேடு: நடவடிக்கை தேவை
உடுமலை; நகரின் அருகிலுள்ள ஒட்டுக்குளம் கரையிலும், நீர் வரத்து கால்வாயிலும், மீண்டும் குப்பை கொட்டப்படுவதுடன், சுகாதார சீர்கேடும் நிரந்தரமாகியுள்ளது.உடுமலை நகரின் அருகிலுள்ள, ஒட்டுக்குளத்தின் நீர் தேக்க பரப்பு, 90 ஏக்கராகும். மழைக்காலங்களில், ஏழு குளங்களின் உபரி நீரை வெளியேற்றும் மதகுகள், இக்குளத்தில் அமைந்துள்ளன.உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இக்குளம் உள்ளது.ஆனால், நகர எல்லையில், அமைந்துள்ளதால், கட்டுமான கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளையும் இக்குளத்தில் கொட்டி வந்தனர்.குளத்துக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாயிலும், உபரி நீர் வெளியேறும் மதகு பகுதியிலும், டன் கணக்கிலான கழிவுகள் குவிப்பது தொடர்கதையானது. இதனால், குளத்தில் நீர் தேக்குவது பாதிக்கப்பட்டதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இதையடுத்து, ஒட்டுக்குளம் கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில், கரையின் இருபுறங்களிலும், கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் வர முடியாத படி, சிறிய கான்கிரீட் தடுப்புகள் வரிசையாக அமைக்கப்பட்டது. எச்சரிக்கை அறிவிப்பும் ஒட்டப்பட்டது.தற்போது, தடுப்பு சேதமடைந்துள்ளது; எச்சரிக்கை அறிவிப்பும் மாயமாகியுள்ளது. இதனால், இரவு நேரங்களில், கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். குறிப்பாக, நீர் வரத்து கால்வாயின் இருபுறங்களிலும், சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியுள்ளது.இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மீண்டும் அப்பகுதியில், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினருடன் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.