உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை செல்வத்தால் நிமிர்ந்து நிற்கிறோம்! விருது பெற்ற செல்வநாயகி பெருமிதம்

கால்நடை செல்வத்தால் நிமிர்ந்து நிற்கிறோம்! விருது பெற்ற செல்வநாயகி பெருமிதம்

பல்லடம்: ''கால்நடை வளர்ப்பு தொழிலால் எங்களது குடும்பமே நிமிர்ந்து நிற்கிறது'' என, பல்லடம் அருகே, சிறந்த கால்நடை விவசாயி விருது பெற்ற பெண் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.பல்லடம் ஒன்றியம், பருவாய் ஊராட்சி ஆறாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மனைவி செல்வநாயகி, 48. கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தென்னிந்திய பால் உற்பத்தியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த கால்நடை விவசாயிக்கான விருது இவருக்கு கிடைத்தது.கால்நடை வளர்ப்பு தொழில் குறித்து செல்வநாயகி கூறியதாவது:எங்களுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. எனது கணவரும் நானும் இணைந்து, 15 கால்நடைகள் வளர்த்து வருகிறோம். முன்னதாக, விசைத்தறி தொழில் செய்து வந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை கைவிட்டு, கடந்த 2003 முதல் கால்நடை வளர்ப்பு தொழில் துவங்கினோம். ஆரம்பத்தில் சரியாக தொழில் செய்ய முடியாமல் மிகவும் சிரமம் ஏற்பட்டது.பலரது அறிவுரைகளைப் பெற்று, எதனால் நஷ்டம் ஏற்படுகிறது, தொழிலை லாபகரமாக செய்வது எப்படி என்பது குறித்து ஆராய்ந்து, கால்நடை வளர்ப்பு குறித்து முறையாக தெரிந்து கொண்டு தற்போது வெற்றிகரமாக கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறோம்.ஆண்டுக்கு, 30 ஆயிரம் லிட்டர் வரை தரமான பால் உற்பத்தி செய்து சொசைட்டிக்கு வழங்கி வருகிறோம்.கால்நடை வளர்ப்பு தொழில்தான் எங்களது குடும்ப பொருளாதாரத்தின் ஆதாரமாக உள்ளது. இத்தொழிலை செய்துதான் எங்களது இரண்டு மகள்களையும் உயர் கல்வி படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தோம். வீடு கட்டியதும் இதன் மூலம்தான்.ஆண்டு முழுவதும் எந்தவித தடங்கலும் இன்றி, 30 ஆயிரம் லிட்., பால் வழங்கி வருவதால் கூட்டுறவு சொசைட்டியிலும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சொசைட்டி மூலமாகவே, தென்னிந்திய அளவிலான சிறந்த கால்நடை விவசாயிக்கான விருது கர்நாடகாவில் எனக்கு கிடைத்தது.தஞ்சாவூர் வேளாண் பல்கலை சார்பில் தமிழக அளவில் சிறந்த பால் உற்பத்தியாளருக்கான விருது ஏற்கனவே பெற்றுள்ளேன். மொத்தத்தில், கால்நடை வளர்ப்பு மூலம் எங்களது குடும்பமே நிமிர்ந்து நிற்கிறது.சராசரியாக, தினசரி, 10 மாடுகள் என, 100 லிட்., பால் கரந்து சொசைட்டிக்கு வழங்கி வருகிறோம். நெய், பன்னீர் உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றி தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல ஆர்வம் உள்ளது. புண்ணாக்கு, தீவனங்கள் விலை உயர்ந்துள்ளது. ஆனால், பால் விலை மட்டும் ஏறவில்லை.பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். அப்போதுதான் எங்களைப் போன்று கால்நடைகளை மட்டுமே நம்பியுள்ளவர்கள் பயனடைய முடியும் என்பதுடன் புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களும் முன் வருவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.சொசைட்டி மூலமாகவே, தென்னிந்தியஅளவிலான சிறந்த கால்நடை விவசாயிக்கான விருது கர்நாடகாவில் எனக்கு கிடைத்தது. தஞ்சாவூர் வேளாண் பல்கலை சார்பில் தமிழக அளவில் சிறந்த பால் உற்பத்தியாளருக்கான விருது ஏற்கனவே பெற்றுள்ளேன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ