இளைஞர்களை விவசாயிகளாக்க களம் இறங்கிய வீ தி லீடர்ஸ்
பல்லடம்; இயற்கை விவசாயத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்காக, இளைஞர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அமைப்பினர் களம் இறங்கியுள்ளனர். பல்லடம் அடுத்த, கேத்தனுார் இயற்கை விவசாயி பழனிசாமியுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினர் கூறியதாவது: விவசாயத்தில் ஈடுபட முயற்சிக்கும் இளைஞர்களை, இயற்கை விவசாயத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். இதன்படி, இயற்கை விவசாயத்தில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு, இயற்கை விவசாயிகளின் விளை நிலங்களுக்கே நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி வழங்கப்பட உள்ளது. வாரம் முழுவதும் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் என, இளைஞர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கள பயிற்சி வழங்கப்படும். உழவு, நடவு என, இயற்கை விவசாயம் செய்யும் வழிமுறைகள், விளைவித்த உணவுப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். இயற்கை விவசாயத்தால் ஆரோக்கியம் மேம்படுவதுடன், பொருளாதாரத்தையும் எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது என்பதற்கும் இது உதவியாக இருக்கும். கொங்கு மண்டலத்தில் உள்ள ஆயிரம் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுடனான ஒப்பந்தம் முடிந்ததும், விரைவில், பயிற்சி முகாம் துவங்கும். இது, படித்த இளைஞர்கள் இயற்கை விவசாயத்துக்கு வருவதுடன், உணவு உற்பத்தி மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். அடுத்த தலைமுறைக்குநஞ்சில்லாத உணவுஇளைஞர்கள் இயற்கை விவசாயத்துக்கு வந்தால்தான், நஞ்சில்லாத உணவு உற்பத்தி செய்து, அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ முடியும். அவ்வகையில், இளைஞர்களை இயற்கை விவசாயத்திற்கு கொண்டுவரும் நோக்கில், இளைஞர்களே களம் இறங்கியுள்ளது, மிகப்பெரும் முயற்சியாக உள்ளது. - பழனிசாமி,இயற்கை விவசாயி,கேத்தனுார்.