நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில் குளங்களை காணோம்!
உடுமலை: நீர் நிலைகளில் ஆழப்படுத்தி மழை நீரை சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையில், விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில், உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில் குளம், குட்டைகள் விடுபட்டுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 151 நீர் நிலைகளில் வண்டல் மண், களி மண் ஆகியவற்றை விவசாயம் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள, இலவசமாக மண் எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.வண்டல் மண் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், https://tnesevai.tn.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், விவசாய பயன்பாட்டிற்கு, ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு, 75 கன மீட்டர், புன்செய் நிலத்திற்கு, 90 கன மீட்டர் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. மண் பாண்ட தொழிலாளர்கள், 60 கன மீட்டர் வரை எடுத்துக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பட்டியலில், குடிமங்கலம் ஒன்றியத்தில், 51 குளம், குட்டைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குளங்களே இல்லை
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், 118 பெரியளவிலான குளங்களும், நுாற்றுக்கணக்கான குட்டைகளும்; மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில், 74 குளம், குட்டைகள் உள்ளன.குளங்களின் நீர் வழித்தடங்களில் மண் தேங்கியும், நீர் வரத்து தடைபட்டும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகி, குளம், குட்டைகள் அடையாளத்தை இழந்து வருகின்றன.கிராம குளங்களை துார்வாரி, மழை நீரை சேமிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கும் குளம், குட்டைகள் பட்டியலை தயார் செய்து அனுப்ப அறிவுறுத்தினர்.ஆனால், முறையாக குளங்களை ஆய்வு செய்து, அவற்றின் பரப்பளவு, தேங்கியுள்ள வண்டல் மண் குறித்து கணக்கீடு செய்து அனுப்பாமல், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர்; குளம், குட்டைகளே இல்லை என, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கியுள்ளனர்.அதிகாரிகள் அலட்சியத்தால், நடப்பாண்டு, உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிமவள கொள்ளை
விவசாயிகள் கூறியதாவது:குளம், குட்டைகளில் பெறப்படும் மண்ணை நிலங்களில் இடும் போது, மண் வளம் பெருகும். பயிர் சாகுபடி சிறப்பாக இருக்கும். ஒன்றிய அதிகாரிகள், குளம், குட்டைகள் உள்ளதை திட்டமிட்டு மறைத்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியத்தில், சட்ட விரோதமாக பல்வேறு பகுதிகளிலுள்ள குளம், குட்டைகளில், அதிகாரிகள் 'ஆசி' யுடன் கனிம வளக்கொள்ளை தினமும் நடக்கிறது.ஆனால், விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்க மட்டும், ஒன்றிய அதிகாரிகள் பட்டியல் அனுப்பாமல், மாவட்ட நிர்வாகத்தையும், விவசாயிகளையும் ஏமாற்றியுள்ளனர்.எனவே, மாவட்ட கலெக்டர், மற்ற துறை அதிகாரிகளை கொண்டு, உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள குளம், குட்டைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து, துார்வாரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பணியில் அலட்சியமாகவும், குளம், குட்டைகள் இல்லை என அறிக்கை வழங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.