வானிலை மாற்றத்தால் நோய்கள் தாக்கம் அரசு மருத்துவமனை செல்வோர் அதிகரிப்பு
திருப்பூர், ; பத்து நாட்களுக்கு மேலாக திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை தேடிவருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோடு, ஐ.டி.ஐ., எதிரில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. காலை 7:30 முதல், 11:30 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. டாக்டர்கள், சிறப்பு நிபுணர்களை நோயாளிகளை சந்தித்து மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரை வழங்குகின்றனர்.தேவையிருப்பின் வார்டில் அனுமதிக்க, உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர். கடந்த ஏப்ரல் மூன்று மற்றும் நான்காவது வாரம் தினசரி ஓ.பி., (புறநோயாளிகள் எண்ணிக்கை) 1,900 - 2,200 என்ற நிலையில் இருந்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவமழை துவக்கம் உள்ளிட்ட காரணங்களால் மே துவக்கத்தில் பரவலாக திருப்பூரில் மழை பெய்துள்ளது.கடந்த இரு வாரமாக அருகில் உள்ள கோவை, நீலகிரிக்கு 'ரெட்அலர்ட்' விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது.எச்சரிக்கை விடுக்கப்பட்ட, மழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியலில் திருப்பூரும் இணைந்ததால், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளின் வானிலை மாற்றம் ஏற்பட்டது.அக்னிநட்சத்திர துவக்கத்தின் போது, கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டு, குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறியது.அவ்வப்போது மழை, இரவு, அதிகாலையில் குளிர்காற்று வீசுவதால், மார்கழி மாதத்தை போல் குளிரும் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையை சிகிச்சைக்காக தேடி வருவோரின் எண்ணிக்கை கடந்து பத்து நாட்களாக அதிகமாக உள்ளது. தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை, 2,100 - 2,500 ஆக உயர்ந்துள்ளது.வழக்கமாக, காலை 7:30க்கு பதிவுசீட்டு பெற மக்கள் காத்திருப்பர். தற்போது, காலை 6:45 மணி முதலே, பணியாளர் வரும் முன், பதிவு சீட் பெற வரிசையில் காத்திருக்க துவங்கி விடுகின்றனர். மதியம், 12:15ஐ கடந்தாலும் டாக்டர்கள் இருக்கையை விட்டு எழுந்துசெல்ல முடியாமல் நோயாளியை பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நாங்க ரெடி!
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பத்மினி கூறுகையில்,'மழைக்கால முன்னெச்சரிக்கையாக கூடுதல் படுக்கை, வார்டு நிறுவுவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினர் தயாராக உள்ளனர்.அதற்கான தேவையிருப்பின், கூடுதல் வார்டு துவங்கப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும். குளிர்ந்த சீதோஷ்ணம், மழை என்பதால், தற்போதைக்கு காய்ச்சல், சளி, உடல் வலிக்கு பலர் வருகின்றனர்.தொடர் சிகிச்சை மேற்கொள்பவர்கள்; இணை நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப் படுகிறது,' என்றார்.