யாரிடம் புகார் சொல்வது? அத்திக்கடவு பயனாளிகள் குழப்பம்
திருப்பூர்: திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படும் நிலையில் சில இடங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு, குழாய் இணைப்பில் உடைப்பு உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதுபோன்ற குறைகளை யாரிடம் முறையிடுவது என்ற குழப்பம் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் உள்ளது. திட்டம் துவங்கிய நாளில் இருந்தே இப்பிரச்னை உள்ள நிலையில், 'அத்திக்கடவு - அவிநாசி திட்ட குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில், தொடர்புடைய திட்ட பொறியாளரின் மொபைல் போன் எண்ணை, பொதுமக்கள் பார்வையில் படும்வகையில், வைப்பதற்குரிய ஏற்பாடு நடந்து வருகிறது. இதுதொடர்பாக, வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,' என கடந்தாண்டு டிச., மாதமே நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சில இடங்களில் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டிருப்பினும், அந்த எண்ணுக்குரிய நபர் அழைப்பை ஏற்பதில்லை என அத்திக்கடவு திட்ட பயனாளிகள் தெரிவிக்கின்றனர். இப்படி செய்யலாமே... அத்திக்கடவு திட்டம், நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்திக்கடவு குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் பணியை 'சென்சார்' உதவியுடன் நீரேற்ற நிலையங்களில் இருந்தே கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், நீர் செறிவூட்டலின் போது ஆங்காங்கே ஏற்படும் பிரச்னை, குழாய் உடைப்பு உள்ளிட்டவற்றை, திட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல பிரத்யேக செயலியை உருவாக்கலாம். அல்லது, பிரத்யேக வாட்ஸ் ஆப், அரட்டை எண் வாயிலாக பதிவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்.