சிறுதானிய ஊக்குவிப்பு மானியம் அரசு வழங்கிய போதிலும் அதன் விற்பனை வாய்ப்பை அதிகரிக்காததால் விலை உயர்வு ஏற்படவில்லை. இது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாததால் சிறுதானிய உற்பத்தி எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.அரிசி, கோதுமை உணவுகளால் போதுமான ஊட்டச்சத்து இல்லை. ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சிறுதானியங்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்களின் முக்கிய உணவாக சிறுதானியமே இருந்தது. பசுமை புரட்சிக்கு பின் அதன் முக்கியத்துவம் குறைந்து விட்டது.இதனால், பலரும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட சமச்சீர் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக கடந்த ஆண்டை மத்திய அரசு சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. அத்துடன் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சி எடுத்தது.தற்போது அரசு சார்பில் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட விதைகள், நுண்ணூட்டம், உயிர் உரம் மற்றும் தார்பாய் ஆகியவற்றை மானியத்தில் வழங்கி வருகிறது. இருப்பினும், அதன் உற்பத்தி எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.அரிசியை விட சிறுதானியங்கள் விலை மலிவாக விற்கப்படுகிறது. பலர் மாடு, கோழி தீவனத்திற்காக மட்டுமே சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலை உள்ளது. குறைந்த அளவு நுகர்வு இருப்பதால் விலை அதிகரிக்கவில்லை. இது விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.இதுதவிர, குறைந்த பரப்பில் சாகுபடி செய்வதால் மயில், கிளி, மான் போன்றவற்றால் சேதம் அதிகம் ஏற்படுகிறது. இதுவே விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம். அரசு ரேஷன் கடைகள் முதற்கொண்டு சிறுதானியங்களை மானிய விலையில் வழங்குதல், உணவு பழக்கத்தை மாற்ற முயற்சித்தல், விற்பனை வாய்ப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கையை எடுக்காத வரை விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகாது. இதனால், சிறு தானியம் ஊக்குவிப்பு மானியம் கொடுத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. வெங்காயத்தால் கண்ணீர்
கடந்த டிச., மாதத்தில் ஏற்பட்ட விலை உயர்வால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடி பரப்பை அதிகரித்தனர். அபரிமிதமான விளைச்சல் காரணமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளது.கார்த்திகை பட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பனி காலத்தில் நோய் தாக்குதல் அதிகரிக்கும் என்பதால் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சற்று தாமதமாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது.கார்த்திகை பட்ட துவக்கத்தில் சாகுபடி செய்த ராசிபுரம், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய பகுதிகளில் அறுவடை துவங்கி உள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. உள்ளூரில் கணிசமான விவசாயிகள் இருப்பு வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.எனவே, சின்ன வெங்காயம் குறைந்தபட்சமாக கிலோ, 20 - 25 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள சின்ன வெங்காய அறுவடை தீவிரமடையும். இதனால், விலை மேலும் சரியுமோ என்ற கவலை விவசாயிகளிடம் நிலவுகிறது.வெங்காய வியாபாரி ரவி கூறுகையில், ''தேவையை காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதே விலை சரிவுக்கு காரணம். கிலோவுக்கு உற்பத்தி செலவு, 25 ரூபாய் ஆகிறது. அதற்கு குறைவாக விற்கும் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். தற்பொழுது ஏற்றுமதிக்கும் பலர் கொள்முதல் செய்ய துவங்கி உள்ளனர். உள்ளூர் அறுவடை துவங்கும் பொழுது வெளியூர் வரத்து குறைந்து விடும். இதனால், இதைவிட மேலும் விலை குறைய வாய்ப்பில்லை,'' என்றார்.