உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாட்கோ வளாகம் தலைநிமிருமா?

தாட்கோ வளாகம் தலைநிமிருமா?

திருப்பூர்; ''பாழடைந்த தொழிற்கூடங்களுடன் காணப்படும், முதலிபாளையம் 'தாட்கோ' வளாகத்தை செப்பனிட்டு, இளம் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த, 1990ல், 9.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 ஏக்கர் பரப்பில், திருப்பூர், முதலிபாளையத்தில், ஆதிதிராவிட மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, 100 தொழிற்கூடங்களுடன், 'தாட்கோ' வளாகம் திறக்கப்பட்டது; எதிர்கால திட்டத்துக்காக, 40 ஏக்கர் நிலமும் இருந்தது.ஒவ்வொரு தொழிற்கூடமும், தலா, 30 சென்ட் பரப்பளவில், விசாலமான கான்கிரீட் கட்டடத்துடன் குறுக்கு வீதி ரோடுகள், பிரதான ரோடு, தெருவிளக்கு என, அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது.

40 கூடங்கள் மட்டுமே ஒதுக்கீடு

இதுநாள் வரை, 40 தொழிற்கூடங்கள் மட்டுமே, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது; பயனாளிகளுக்கு ஒதுக்கிய சில கூடங்களும், கோர்ட் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டுள்ளன.ஒரு சில கூடங்கள் மட்டும் நன்றாக இயங்கி வருகின்றன; சில நிறுவனங்கள், கட்டட பராமரிப்பு செய்யாமல், இயங்கி வருகிறது.கடந்த, 15 ஆண்டுகள் முன், 'தாட்கோ' வளாகத்தில், முறைகேடாக இயங்கிய சாயப்பட்டறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.'தாட்கோ' வளாகத்தின் நுழைவாயில் பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இடது, வலது என, இருபுறமும் உள்ள தொழிற்கூடங்களில், பெரும்பாலான கட்டடங்கள் பழுதாகி, இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன.

தொழிலை ஊக்குவிக்க வேண்டும்

தொழில்முனைவோர் கூறியதாவது:'தாட்கோ' தொழிற்கூடம், ஆதிதிராவிட மக்களுக்கு மட்டும் வழங்கப்படும். கட்டி முடித்தும் கூட, இதுநாள் வரை, 60 தொழிற்கூடங்கள் ஒதுக்கீடு செய்யாமலேயே வீணாகியுள்ளது வேதனைக்குரியது. குடிநீர் வசதி இல்லாததால், யாரும் இங்கு தொழில் நடத்த வருவதில்லை.அருகே இருக்கும் 'சிட்கோ' வளாகம், அரசு திட்ட உதவியால், சிறப்பாக இயங்கி வருகிறது. 'தாட்கோ' வளாகம், பாழடைந்த கட்டடங்களுடன் பரிதாபமாக காட்சியளிக்கிறது. பழுதான கட்டடங்களை பழுதுபார்த்து, இளம் தொழில் முனைவோர்களுக்கு வழங்கி, தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.12 கோடியில் பணிகள்

தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'தாட்கோ' வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, புதிய தார்ரோடு பணி, தெருவிளக்கு புதுப்பிப்பு, தண்ணீர் வினியோகம், சுகாதார வளாகம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. பழுதாகியுள்ள தொழிற்கூடங்களை, முழுமையாக பழுதுநீக்கி, புதிய தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில், பழுதான தொழிற்கூடங்களை பராமரித்து, விரைவில், அனைத்து தொழிற்கூடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.- ரஞ்சித்குமார், பொது மேலாளர், 'தாட்கோ'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ